Published : 31 Jul 2025 06:45 PM
Last Updated : 31 Jul 2025 06:45 PM
தூத்துக்குடி: “சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்று கவினின் தந்தை கோரிக்கை வைக்கிறார். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்வதில் போலீஸாருக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். மேலும், “ஆணவக் கொலைக்கு எதிராக தேசிய அளவில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் கவின் செல்வகணேஷ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கவின் கொலையில் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. தென்மாவட்டங்களில் நடந்திருக்கிற அத்தனை கொலைகளுக்கு பின்னாலும் கூலிப்படையினரின் கைவரிசை இருந்திருக்கிறது.
சுர்ஜித்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை பார்க்கிறபோது, அவர் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு படத்தை போஸ்ட் செய்திருக்கிறார். நாயை பிடித்துக் கொண்டு விரைவில் ஒரு சம்பவம் நடக்கப் போகிறது என்பதை போன்ற சிம்பாலிக் மெசேஜாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆகவே, அவர் திடீரென ஆத்திரப்பட்டு இதைச் செய்யவில்லை.
கவினோடு முரண்பட்டும் பகைத்துக் கொண்டும் உறவாடவில்லை, நம்பக்கூடிய அளவுக்கு நெருக்கமாக உறவாடி இருக்கிறார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர் அழைத்ததுமே பின்னால் அவரோடு போய் இருக்கிறார். இது நீண்ட கால செயல் திட்டமாக தெரிகிறது. திட்டமிட்டுதான் இந்த படுகொலை நடந்திருக்கிறது. பெற்றோர் இருவரையும் விசாரணைக்கு உட்படுத்தினால்தான் பின்னால் இருக்கிற கூலிப்படையினர் யார் என்பதையும் கண்டறிய முடியும்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பத்தினருக்கு என்ன இழப்பீடுகளை தர வேண்டுமோ, அந்த இழப்பீடுகளை தர வேண்டும். அரசு வேலை வாய்ப்பு தர வேண்டும். அவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும். புதிய வீடு கட்டி தர வேண்டும். கவின் குடும்பத்தினருக் கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். ஆயுதம் தாங்கிய போலீஸார் கொண்ட பாதுகாப்பு வழங்க வேண்டும்.
சுபாஷினி வெளியிட்ட வீடியோ யாருடைய கட்டுப்பாட்டிலோ இருந்து அச்சுறுத்தலின் காரணமாக பதிவிட்டுள்ளதாக தெரிகிறது. ஒட்டு மொத்தமாக சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் நடக்கிற படுகொலைகளை தடுப்பதற்கு ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டம் தேவை. அதனால்தான் இந்திய ஒன்றிய அரசு இந்தச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று திருமாவளவன் கூறினார்.
முன்னதாக, தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் கூறும்போது, “கவின் படுகொலை பிரச்சினை, நாடு தழுவிய பிரச்சினை. இதற்கு தேசிய அளவில் சட்டம் தேவை. உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. ஆனால், எந்த மாநிலமும் அதனை பின்பற்றவில்லை. இந்த கொலை அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
இது தொடர்பாக நானும், ரவிக்குமார் எம்.பியும் உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். வாய்ப்பு கிடைத்தால் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். சட்டம், ஒழுங்கு மீது தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. குற்றவாளியின் தாய், தந்தையர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தந்தையை கைது செய்துள்ளனர்.
ஆனால், தாயை கைது செய்ய போலீஸார் தயக்கம் காட்டுகின்றனர். சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்று கவினின் தந்தை கோரிக்கை வைக்கிறார். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட அவரை கைது செய்வதில் போலீஸாருக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை.
காவல் ஆய்வாளர் மிரட்டல் விடுத்ததாக கவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். சாதி மறுப்பு திருமணம், இதுபோன்ற காதல் சம்பவங்களில் காவல் துறையினர் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர். அது ஏற்புடையது அல்ல. சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது முக்கியம். அதுபோல அதனை நடைமுறைப்படுத்துவதும் முக்கியம்” என்று அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டம்: கவின் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி நெல்லையில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT