Published : 31 Jul 2025 03:31 PM
Last Updated : 31 Jul 2025 03:31 PM
ராமநாதபுரம்: ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று ராமநாதபுரத்தில் மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: எல்லை தாண்டி மீன்பிடித்தாக படகுகளை பறிமுதல் செய்து, மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இலங்கையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அமைச்சர்களிடம் பேசி தீர்வு காண்பதற்கான முயற்சிகளை செய்வேன்.
விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் தொடக்க வேளாண்மை வழங்கப்பட்ட பயிர்க்கடன் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வறட்சியான ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.540 கோடி காப்பீடு தொகை அதிமுக ஆட்சியில் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டன.
ரூ.14 ஆயிரத்து 400 கோடியில் காவேரி - குண்டாறு திட்டத்தை அதிமுக ஆட்சியில் மேற்கொண்டோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டார்கள். தற்போது மேட்டூர் அணை நிரம்பி 1 லட்சத்து 24 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக கடலில் வீணாக போய் கலக்கின்றது.
காவேரி - குண்டாறு திட்டம் இருந்திருந்தால் கடலில் உபரி நீராக கலக்கும் தண்ணீர், ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களை நிரப்பியிருக்கும். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் காவேரி - குண்டாறு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.
சேலம் மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் 1050 ஏக்கரில் கால்நடை பூங்கா அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது. இந்த திட்டம் முடியும் தருவாயில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தை மட்டும் நான் திறந்து வைத்தேன். இதில் கலப்பின ஆடு, மாடுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் முடக்கப்பட்டது.
நெசவாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் பல புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டு சலுகைகள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள திமுக ஆட்சியில் எந்த சலுகையும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. 2019-ல் புதிய ஜவுளிக் கொள்கை கொண்டுவரப்பட்டது. பன்னாட்டு ஜவுளி கண்காட்சி ஏற்படுத்தப்பட்டது. ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இருந்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் நலிந்து போய் மூடும் நிலையில் உள்ளது.
நாட்டுப் படகு மீனவர்கள் தங்கள் தொழில் சார்ந்து ஏற்படுகின்ற இன்னல்களை தெரிவித்துள்ளார்கள். அவை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சரி செய்து தரப்படும். மீனவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது வலைகளுக்கும், சேதமடைந்த படகுகளுக்கும் மானியம் வழங்கப்பட்டது. விவசாயிகள் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்டபோது, சேதத்தை கணக்கிட்டு நிவாரண தொகையை உடனடியாக அதிமுக அரசாங்கம் வழங்கியது.
16 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக அரசு, கச்சத்தீவு இல்லாத காரணத்தினால் தமிழக மீனவர்கள் பாதிக்கின்றார்கள் என்று தெரிந்திருந்தும், கச்சத்தீவை மீட்பதற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. கச்சத்தீவை மீட்க அதிமுக சார்பாக மத்திய அரசை தொடர்ந்து வலியுறத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ராமநாதபுரம் சேதுபதி மன்னர் அரண்மனையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT