Published : 31 Jul 2025 02:52 PM
Last Updated : 31 Jul 2025 02:52 PM
சென்னை: மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.40 ஆயிரம் வரை தனிநபர் கடனுதவி வழங்க தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சுயஉதவிக் குழுக்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் (ஆண்/பெண்) மற்றும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களை தொழில் முனைவோராக ஊக்குவிக்கும் வகையிலும் தனிநபர் ஒருவருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் 6 ஆயிரம் பேருக்கு கடனுதவி வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் தொழில்கள், பண்ணைசாரா தொழில்கள், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு பிணையம் எதுவுமின்றி ரூ.40 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. இது 6 சதவீத வட்டி விகிதத்தில் 12 முதல் 24 மாத தவணையில் திரும்பப்பெறும் கடனாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற 18 வயதுக்கு மேற்பட்ட ஊரக பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவரது பெற்றோர் அல்லது கணவர் அல்லது மனைவி ஆகியோர் சுயஉதவிக் குழுக்களில் உறுப்பினராக இருக்கவேண்டும். திருநங்கையர்கள் சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு கடனுதவி வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகள் யுடிஐடி அடையாள அட்டையையும், திருநங்கையர்கள் சமூக நலத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டையையும் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையர்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், அனைத்து மாவட்டங்களில் செயல்படும் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர், சென்னை வள்ளுவர் கோட்டம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றை அணுகி பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 155 330 என்ற தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார அழைப்பு மையத்தைத் தொடர்புகொள்ளுமாறு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT