Last Updated : 31 Jul, 2025 02:03 PM

4  

Published : 31 Jul 2025 02:03 PM
Last Updated : 31 Jul 2025 02:03 PM

‘பாஜகவுடனான உறவு முறிந்தது’ - ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு

ஓ.பன்னீர்செல்வம் - கோப்புப் படம்.

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை கொண்டிருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொள்வதாக, அதன் முக்கியத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொண்டது. அடுத்ததாக, தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் விரைவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். மூன்றாவதாக, தேர்தலில் இப்போதைக்கு நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. எதிர்காலத்தில் அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

கூட்டணி முறிவுக்கான காரணத்தைக் கேட்டபோது, “காரணம் நாடு அறிந்ததே. அதை யாரும் சொல்லத் தேவையில்லை. பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும்.” என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

திமுக அரசை வீழ்த்த வேண்டுமென்பதில் உங்களுக்கு உடன்பாடா? என்ற கேள்விக்கு, பண்ருட்டி ராமச்சந்திரன், “யாரை வீழ்த்த வேண்டும் என்பது எங்களது குறிக்கோள் அல்ல. யாரையெல்லாம் வாழ்த்த வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்.” என்று சூசகமாக பதில் சொன்னார்.

முதல்வருடன் சந்திப்பு ஏன்? - இன்று காலை நடைப்பயிற்சியின் போது ஓபிஎஸ் - முதல்வர் ஸ்டாலின் சந்தித்துக் கொண்டது குறித்த கேள்விக்கு, “நான் சென்னையில் இருந்தால் தியோசோஃபிக்கல் சொசைட்டி வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கு. அங்கு இன்று முதல்வரும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டுச் சென்றேன்.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x