Published : 31 Jul 2025 05:44 AM
Last Updated : 31 Jul 2025 05:44 AM
சென்னை: மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்கள் பயன்படுத்ததடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால், மெட்ரோ ரயில்வே சட்டத்தின் கீழ், ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில், 2 வழித் தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நாள்தோறும் தூய்மையாக வைத்திருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்கிடையில், மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெல்லக் கூடிய புகையிலை பொருட்களை சிலர் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவாக, எச்சில் துப்புவது, ஆங்காங்கே புகையிலை குப்பைகள் கொட்டுவது போன்ற சுகாதாரமற்ற நிலை காணப்படுகின்றன. இது தொடர்பாக புகார்கள் வந்தன.
இதை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெல்லக் கூடிய புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால், அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: புகையிலையை உட்கொள்வது உடல்நலத்துக்குமிகவும் தீங்கு விளைவிப்பதுடன், பொது இடங்களில் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் தூய்மை, சுகாதாரத்தை பராமரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்களுக்கு உள்ளேயும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். மெல்லக் கூடிய புகையிலைப் பொருட்களை மெட்டல் டிடெக்டர்கள் மூலம் கண்டறிய முடியாததால், நெரிசல் இல்லாத நேரங்களில் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்படும். இதுதவிர, பயணிகளின் நடவடிக்கைகளை நடைமேடை பாதுகாப்புப் பணியாளர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத் தப்பட்டுள்ளனர்.
ரூ.500 அபராதம்: தூய்மை மற்றும் நடத்தை விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு மெட்ரோ ரயில்வே (செயல்பாடு மற்றும் பராமரிப்பு) சட்டம் மற்றும் மெட்ரோ ரயில்வே கேரஜ் மற்றும் டிக்கெட் விதிகள் சட்டத்தின் கீழ், ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT