Published : 29 Jul 2025 09:00 PM
Last Updated : 29 Jul 2025 09:00 PM
மதுரை: மதுரையில் ஆகஸ்டு 25-ல் நடக்கும் தவெக மாநாடு குறித்த பணிகளை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் இன்று நேரில் ஆய்வு செய்தார். காவல் துறை அனுமதியை விரைந்து வழங்கவும் எஸ்பியிடம் அவர் வலியுறுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-வது மாநில மாநாட்டை ஆகஸ்டு 25-ல் மதுரையில் நடத்துகிறது. இதற்காக மதுரை - தூத்துக்குடி சாலையில் 506 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பந்தல் கால் நடத்தப்பட்டு மாநாட்டுக்கான மேடை, பந்தல், பார்வையாளர்கள், பார்க்கிங் கேலரிகள் அமைத்தல் போன்ற பணிகளும் தொடங்கியுள்ளன.
மாநாடுக்கான உரிய அனுமதி, உரிய பாதுகாப்பு கேட்டு அக்கட்சியின் மாநில செயலாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்திடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து மாநாடு நடக்கும் இடத்தை போலீஸார் ஆய்வு மேற்கொண் டனர். இந்நிலையில், மாநாட்டு பணிகளை பார்வையிட, கட்சியின் மாநில செயலாளர் ஆனந்த் இன்று மதுரைக்கு வந்தார். அவர், மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்தை சந்தித்து ஏற்கெனவே கொடுத்த கடிதம் குறித்த நிலையை கேட்டறிந்தார். விரைந்து அனுமதி வழங்கும்படி வலியுறுத்தியுள்ளார்.
ஆக. 27-ம் தேதி விநாயகர் சதூர்த்தி பாதுகாப்பு போன்ற பணிகள் இருப்பதால் வேறு தேதியில் நடத்தலாமா என இரு தரப்பிலும் ஆலோசித்தாக வும், அதற்கு பொதுச் செயலாளர் வாய்ப்பில்லை எனக் கூறியதாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து பாரபத்திக்கு சென்ற ஆனந்த், மாநாட்டு திடலில் நடக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டார். அவருடன் தவெக மாவட்ட செயலாளர்கள் கல்லாணை, தங்கப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘விநாயகர் சதுர்த்திக்கு முன்னும் பின்னும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அளிக்கும் சூழலால் தவெக மாநாட்டை வேறு தேதிக்கு மாற்றலாமா என அக்கட்சி நிர்வாகிகளிடம் கேட்டோம். எதுவானாலும் கட்சி தலைவரே முடிவெடுப்பார்’ என்றனர். தவெக நிர்வாகி ஒருவர் கூறுகையில் ‘விஜயகாந்த் பிறந்தநாள், தலைவர் விஜய்யின் திருமண நாளான ஆகஸ்டு 25-ல் திட்டமிட்டபடி மாநாடு நடக்கும். மாநாட்டுக்கான பணிகளை மும்முரமாக செய்கிறோம். தேதி மாற வாய்ப்பில்லை’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT