Published : 29 Jul 2025 08:10 PM
Last Updated : 29 Jul 2025 08:10 PM

“பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன” - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

திருச்சி: “தேசிய ஜனநாயகக் கூட்டணியை பொறுத்தவரை தமிழகத்தில் அதிமுக, பாஜக உள்ளது. பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப் பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மேற்கொண்டு நடத்தி வருகிறார். முதல் கட்ட பிரச்சாரப் பயணம் நிறைவடைந்த நிலையில், 2-ம் கட்ட பிரச்சாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவகங்கையில் நடைபெறும் சுற்றுப் பயணத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியது:

"சிவகங்கை மாவட்டத்தில் எனது எழுச்சிப் பயணத்தை தொடர உள்ளேன். சென்ற இடங்களில் எல்லாம் மக்களின் எழுச்சியை காண முடிந்தது. கடந்த 17-ம் தேதி அன்று சிபில் ஸ்கோர் அடிப்படையில் பயிர்க் கடன் வழங்க வேண்டும் என வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் வங்கிகளுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை விட்டது. இதனால் பயிர்க் கடன், கால்நடைகள் கடன் பெறுவதில் விவசாயிளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், ‘ஸ்பில் ஸ்கோர் முறையால் எங்களுக்கு பெரிய சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பழைய முறைப்படி எங்களுக்கு பயிர்க் கடன் வழங்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக அனைத்து கூட்டங்களிலும் பேசினேன். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பிரதமர் மோடி திருச்சிக்கு வந்தபோது, ‘சிபில் ஸ்கோர் அடிப்படையில் பயிர் கடன் வழங்குவதை ரத்து செய்து, பழைய முறையிலேயே கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை மனு வழங்கினேன். பிரதமரிடம் நான் மனு அளித்தது தெரிந்ததும் தமிழக அரசு, ‘ஏற்கெனவே பழைய முறைப்படியே விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்க வேண்டும்’ என தொடக்க வேளாண் வங்கிகளுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினையை தீர்ப்பதில் முன்னணியில் இருப்பது அதிமுகதான். விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.

திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் விசிக வெளியேறிவிடும் என்று கூறுகின்றனர். அதேபோல, பாஜக கூட்டணிக்கு டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் வந்தால் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று கேட்கிறீர்கள். நீங்கள் எழுப்பும் கற்பனையான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது. எந்தக் கட்சி திமுக கூட்டணியில் சேரும், பிரியும் என்பதை அந்தக் கட்சியினரிடம் கேளுங்கள்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பி விறுவிறுப்பான செய்தி வர வேண்டும்; மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கேள்வி கேட்கிறீர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு விஷமத்தனமான கேள்வியை எழுப்பி பிரச்சினையை உண்டாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது நடக்காது.

கல்விக்கான நிதி கிடைக்கவில்லை என ஓபிஎஸ், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது குறித்து அவரிடமே கேளுங்கள். 1976-ல் காங்கிரஸ் ஆட்சியில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து மத்திய பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதுவரை என்ன செய்தீர்கள்? திமுக 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரம் இருந்தார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்காதது ஏன்? அடுத்த ஆண்டு தேர்தலை மையமாக வைத்து இந்தப் பிரச்சினையை கிளப்புகின்றனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியை பொறுத்தவரை தமிழகத்தில் அதிமுக - பாஜக உள்ளது. பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. இன்னும் 8 மாதம் காலம் உள்ளது. தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணியில் யார், யார் இருக்கிறார்கள் என்பது குறித்து தெரிவிப்பேன்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x