Last Updated : 29 Jul, 2025 08:48 PM

7  

Published : 29 Jul 2025 08:48 PM
Last Updated : 29 Jul 2025 08:48 PM

“பஹல்காம், விஸ்வகுரு, சோழர் படை...” -  மக்களவையில் தமிழக எம்.பி.க்களின் தெறிப்புகள்

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து கடந்த இரண்டு நாட்களாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்ற தமிழக எம்.பிக்களின் உரையின் சுருக்கம்...

கனிமொழி (திமுக - தூத்துக்குடி எம்.பி): “ஜம்மு காஷ்மீரில் நீங்கள் பல மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக இந்த அவையில் கூறினீர்கள். ஆனால், ரா உள்ளிட்ட மத்திய உளவு அமைப்புகள் தோல்வியடைந்து விட்டதையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் உணர்த்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்ற தொனியில் அமித் ஷா பேசியுள்ளார். ஆனால் பாதுகாப்பு படையினருக்கு ஆதரவாக முதன்முதலில் பேரணி நடத்தியவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த தேசத்தை எந்த வகையிலும் தமிழகம் விட்டுக் கொடுத்தது இல்லை. நாங்கள் இந்த தேசத்துடன் நிற்கிறோம்.

விஸ்வகுரு என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, தீவிரவாத தாக்குதல் நடக்கும் போதெல்லாம் என்ன செய்கிறார்? தீவிரவாத தாக்குதலை தடுக்காவிட்டாலும் அதில் இருந்து விஸ்வகுரு என்ன கற்றுக் கொண்டார்? சோஃபியா குரேஷியை அவமதித்த அமைச்சர் மீது பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுத்தார்? அரசியலுக்காக ஏன் நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகிறீர்கள்? மத ரீதியாக நாட்டில் பிரிவினையை உருவாக்குவதுடன் வெறுப்புணர்வையும் பரப்புவது ஏன்? இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களைப் பிரிக்காதீர்கள்.

தற்போது நடந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றுள்ளாரா? தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஒன்றிய அரசு என்ன உதவி செய்கிறது? மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் இருந்து பணிவைக் கற்றுக் கொள்ளுங்கள். இந்தியா - பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று பலமுறை கூறிவிட்டார் ட்ரம்ப். அவரின் கருத்தை நேரடியாக மறுக்காதது ஏன்?” என்று கனிமொழி எம்.பி பேசினார்.

சு.வெங்கடேசன்( சிபிஎம் - மதுரை எம்.பி): “பஹல்காம் தாக்குதல் துவங்கி ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகுதான் ஒரு உதவியோ, தகவலோ அரசுக்கு கிடைத்திருக்கிறது என்ற செய்தி எவ்வளவு பெரிய வெட்கக்கேடானது? இது மூன்றடுக்கு பாதுகாப்பின் தோல்வி. ராணுவத்தின் தோல்வி, சிஆர்பிஎப் தோல்வி. ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் தோல்வி. இதற்கு யார் பொறுப்பு ஏற்க போவது? அதிகாரிகளா? அமைச்சரா? ஒரே தேசம், ஒரே தலைவர் என்று நீங்கள் சொல்லுகிற பிரதமர் மோடி பொறுப்பேற்கப் போகிறாரா? யார் பொறுப்பேற்க போகிறார்கள்?

நீங்கள் ஆட்சிக்கு முன்பு வரை நடந்த எல்லா சம்பவங்களுக்கும் நேருவில் துவங்கி மன்மோகன் சிங் வரை பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்வீர்களே. இப்போது நீங்கள் யாரை கையை காட்டப் போகிறீர்கள் என்கிற கேள்வியை நாங்கள் எழுப்ப விரும்புகிறோம்.

பஹல்காம் தாக்குதல் சம்பவம் நடந்தபோது சவுதி அரேபியாவில் இருந்த பிரதமர் மோடி, பயணத்தை முடித்துக்கொண்டு உடனே புறப்பட்டார். நேரடியாக பஹல்காம் போகப் போகிறார் என்று நாடே எதிர்பார்த்தது. அவர் நேரடியாக பிஹார் தேர்தல் பேரணிக்கு போனார். எங்கள் இதயங்களில் தேசம் இருக்கின்றது. உங்கள் இதயங்களில் தேர்தல் மட்டும் தான் இருக்கின்றது.

சர்வதேச அரங்கில் இந்தியாவை தனிமைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள். பாலஸ்தீன பிரச்சினையில் ஐநா தீர்மானத்தில் இருந்து விலகியது, ஈரான் தாக்குதல் விவகாரத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்துபோடாதது, ட்ரம்ப்பினுடைய பேச்சுக்கு எதிராக எந்த எதிர்வினையும் ஆற்றாதது இவற்றின்மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒரு கோழை நாடாக கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, சோழர்களுடைய போர் திறனையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார். நான் ஒரு வரலாற்று மாணவனாக, வரலாற்றை அறிந்த எழுத்தாளனாக சொல்கிறேன். இந்தியாவில் ஒரு பேரரசு கடல்கடந்த வெற்றிகளைப் பெற்றிருக்கிறது என்றால் அது ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் சோழ பேரரசு மட்டும்தான்.

அந்த வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா, ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ அவன் தொடங்கிய போரை அவன்தானே முடித்து வைத்தானே தவிர பக்கத்து நாட்டு மன்னன் வந்து முடித்து வைக்கவில்லை. மோடி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடித்து வைத்ததாக 25 முறை சொன்னார். ராஜராஜன் போரை பக்கத்து நாட்டு மன்னன் முடித்ததாக சொல்லியிருந்தால், முதலில் அவன் கதையை முடித்திருப்பான் ராஜ ராஜ சோழன்" என்றார் சு.வெங்கடேசன் எம்.பி.

திருமாவளவன் (விசிக – சிதம்பரம் எம்.பி): “பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு என்ன இழப்பீடு வழங்கியது என்ற விவரம் வெளியாகவில்லை. பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற விவரமும் வெளியாகவில்லை. பஹல்காம் படுகொலையை தடுத்திருந்தால் பெருமைப்படலாம். ஆனால், தாக்குதல் நடந்துவிட்டது. நாம் அதற்கு பதிலடியாக துல்லியமாக திருப்பி தாக்கியிருக்கிறோம் எனப் பெருமை பொங்க பேசுகிறோம். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? பஹல்காம் தாக்குதல் நாட்டின் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவால். இது உளவுத் துறை, பாதுகாப்புத் துறை, அரசு நிர்வாகத்தின் தோல்வி.

370-வது பிரிவை நீக்கினால் ஜம்மு காஷ்மீர் நிலை மாறிவிடும் என்றீர்கள். அதன் பின்னர்தானே இந்த தாக்குதல் நடந்துள்ளது. பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் யாரும் இல்லாமல் போனது ஏன்? இது மிகப் பெரிய கேள்வியை எழுப்புகிறது. 370-வது பிரிவை நீக்கிய அரசின் முடிவு தோல்வியை தழுவியுள்ளது. இந்தியாவின் 2 ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இது குறித்து விளக்கமளிக்க வேண்டும். இது உண்மையானால் ரஃபேல் ஊழல் குறித்த விசாரணை தேவைப்படுகிறது. இந்தப் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்கிறார். நமது இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் அமெரிக்க அதிபருக்கு எதிராக என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்?” என்றார் திருமாவளவன் எம்.பி.

ஆ.ராசா (திமுக – நீலகிரி எம்.பி): “பஹல்காம் தாக்குதலுக்காக பிரதமர் முதல் பாஜக எம்.பி வரை ஒருவர் கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாலே வெற்றி எனக் கூறக் கூடாது. பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம். பஹல்காம் தாக்குதல், அரசின் நிர்வாக திறமையின்மையையே காட்டுகிறது. எனவே, நாட்டை ஆளும் தகுதி பாஜகவுக்கு இல்லை.

இந்தியாவை பாகிஸ்தான் தாக்கப் போகிறது என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் எச்சரிப்பது வெட்கக்கேடானது. உள்துறை அமைச்சர் பேசிய பேச்சில் பெருமை மட்டுமே இருந்தது. அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார். போரில் இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்று கேட்பதற்கு, இந்தியா வென்றதை மட்டும் பாருங்கள் எனக் கூறுகிறார்” என்றார் ஆ.ராசா எம்.பி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x