Published : 29 Jul 2025 08:24 PM
Last Updated : 29 Jul 2025 08:24 PM
“நம்மை யார் ஆள வேண்டும் என்பதை நாமே தேர்வு செய்யலாம்” என்பதுதான் ஜனநாயகத்தின் உச்ச அடையாளம் என்றால் அது மிகையாகாது. ‘தேர்தல்’ என்ற அந்த ஜனநாயக நடைமுறைக்கென சில வரைமுறைகள் உள்ளன. தேசத்துக்கு தேசம் அது மாறுபடும். தேர்தல் அரசியலும் அப்படித்தான். ஆனால், இப்போது உலகம் முழுவதும் தேர்தல் அரசியலில் ஓர் ஒற்றுமை நிலவுகிறது. அது தேர்தலில் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடும், அதன் தாக்கமும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக அரசியல் களத்தில் ஏஐ என்னவெல்லாம் செய்கிறது என்பதை சாதக, பாதகங்கள் தொனியில் பார்க்கலாம்.
பரிணாம வளர்ச்சி கண்ட பிரச்சார உத்திகள்! - தேர்தல் வந்துவிட்டாலே ‘வாக்காளர் பெருமக்களுக்கு’ மவுசு அதிகமாகிவிடும். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலளிக்காத பிரதிநிதி கூட கந்தசாமிக்கும், கருப்பசாமிக்கும் நின்று நிதானமாக பதிலளித்துவிட்டு, தேவைப்பட்டால் மன்னிப்பு கூட கேட்டுவிட்டு வாக்கு கேட்பார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஏஐ-ன் பங்கை அலசுவதற்கு முன்னர், கடந்த கால தேர்தல் பிரச்சார போக்கை வேகமாக ரீவைண்ட் செய்துவிடலாம். முன்பு மேடைப் பேச்சுகள் தான் பிரதான ஆயுதம் / உத்தி. எல்லாக் கட்சிகளும் தெறிக்க விடும் பேச்சாளர்களை கொண்டிருக்கும். அப்புறம் கொள்கை விளக்கப் பாடல்கள், கட்சிக்காகவே ஒலிக்கும் கனீர் குரல் பணம் கொடுத்து பயன்படுத்தக் கூடிய சினிமா பின்னணி குரல் வரை பிரச்சாரப் பாடல்கள் பளபளக்கும், போஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்கள் எல்லாம் இருக்கும்.
சற்றே தொழில்நுட்பம் வளர்ந்த பின்னர், தலைவர்களின் மேடைப் பேச்சுகள் நேரலையில் தொலைக்காட்சிகளில் வந்தன. தேர்தல் வந்துவிட்டால், தொலைபேசி சேவை வழங்குநர்களின் டை அப் - உடன் பதிவு செய்யப்பட்ட குரலில் வாக்கு கேட்பதும் பிரபலமானது. அப்புறம் வாட்ஸ் அப் பிரச்சாரங்கள் வந்து சேர்ந்தன. கூடவே யூடியூபர், இன்ஸ்டா இன்ஃப்ளூயென்சர்களின் பிரச்சாரங்கள் களை கட்டின.
சாதக, பாதகங்கள் என்னென்ன? - இந்நிலையில், 2025 தொடங்கியதிலிருந்தே ஏஐ-ன் தாக்கம் பல துறைகளிலும் ஓங்கியிருக்க, அது தேர்தலிலும் பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏஐ டூல்கள் உதவியோடு சமூக வலைதளங்களில் மக்களின் மனநிலை தேர்தலில் எந்தக் கட்சிக்கு சாதகமாக இருக்கிறது என்ற போக்கை கண்டறிய முடியும். தேர்தல் கள நிலவரங்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க, தொகுதி வாரியான சில புள்ளிவிவரங்களைத் திரட்ட, தொண்டர்கள், கட்சி களப் பணியாளர்களை எளிதில் ஒருங்கிணைக்க, தகவல்களை உடனடியாக பகிர்ந்துகொள்ள எனப் பல்வேறு பணிகளுக்கு ஏஐ தொழில்நுட்பம் ஒரு வரம்தான்.
அதேவேளையில், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக கருத்துகளை அள்ளித் தெளித்து தேர்தலில் போக்கை மாற்றவும் முடியும். சமூக வலைதளமான ஃபேஸ்புக் மீது கூட அமெரிக்க அதிபர் தேர்தல் போக்கை மாற்றியமைக்க வேலை செய்ததாக குற்றச்சாட்டுகள் உண்டு.
‘மலிந்து கிடக்கும் மலினங்கள்’ - இது ஒருபுறம் இருக்க, ஏஐ தொழில்நுட்பங்களால், சர்வதேச அளவில் தேர்தல்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது கவனிக்கப்பட வேண்டியது என்ற அறிவுரைகளும் நிபுணர்களால் முன்வைக்கப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பங்கள் நாம் கொடுக்கும் இன்புட்களை கொண்டு நமக்கான ஒரு மாட்யூலை தயார் செய்து கொடுக்கக் கூடியவை. பெயருக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவுதான். நாம் அந்த தொழிலநுட்பத்திடம் நடுநிலையை எதிர்பார்க்க முடியாது.
ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியை மோசமாக, கீழ்த்தரமாக விமர்சித்து அவர் பற்றிய ஒரு வீடியோவை உருவாக்குவதற்கான ‘இன்புட்ஸ்’ கொடுத்தாலும் எவ்வித தயக்கமுமின்றி அது அதை செய்து கொடுக்கும். உதாரணத்துக்கு, எப்பவோ எங்கேயோ நடிகை த்ரிஷா, ‘நான் சிஎம் ஆக விரும்புகிறேன்’ என்று அளித்த பேட்டியையும், நடிகர் விஜய் தவெக கட்சி தொடங்கியதையும் மலினமான சிந்தனையோடு யோசித்து யாரோ உருவாக்கிய வீடியோ சமீப நாட்களாக இணையத்தில் வைரலானதைக் கவனித்திருப்பீர்கள்.
இது இப்போது கட்சி ஆரம்பித்த விஜய்யை மட்டும் பதம் பார்க்கவில்லை. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஒன்றாக குத்தாட்டம் போடுவது போலும், பிரதமர் மோடி பாட்டு பாடுவது போலவும் கூட சித்தரித்து மலிந்து கிடக்கின்றன. கடந்த சில தேர்தல்களில் மீம்ஸ் கலாய்ப்புகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. அவை கூட பெரும்பாலும் வடிவேலு காமெடி சீன்களை வைத்து உருவாக்கப்பட்டவையாக இருந்ததால் பகடி அளவில் பதிவாகின. ஆனால், இப்போது ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் விஷம் வீடியோக்கள் ஆபத்தானவையாக இருக்கின்றன.
சில நேரங்களில் மலினமான ஏஐ வீடியோக்களை கட்சிகளின் ஐடி விங்குகளே கூட ஊக்குவிப்பதாகவும், ஆனால் அவற்றை அதன் அதிகாரபூர்வ பக்கங்களில் பரப்பாமல், ஆதரவாளர்களை வழியாக பரப்பிவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஐடி விங் பொறுப்பாளர்களைக் கேட்டால் அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்ற கைவிரிப்புகள் மட்டுமே மிஞ்சும்.
இந்தச் சூழலில் மக்களுக்கு / வாக்காளர்களுக்கு தேர்தல் மாண்பு குறித்து தனியாக பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட அந்த அமைப்பு வகுத்துள்ள தகுதியுடைய யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், யார் வேண்டுமானால் ஒரு வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யலாம், மேடையிலேயே அரசையோ, எதிர்க்கட்சியையோ தாக்கிப் பேசலாம். கேள்வி கேட்கலாம். ஏன் வாய்ப்பிருந்தால் வெளிநாடுகளில் நடப்பதைப் போல் நேரடி விவாதங்கள் கூட நடத்தலாம். ஆனால், ஜனநாயக மாண்பை பாதுகாக்க வேண்டும், நியாயமான நேர்மையான தேர்தலின் பக்கம் நிற்க வேண்டும். அதற்கு தொழில்நுட்பங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும். வெறுப்பை, அருவருப்பை கடத்தப் பயன்படுத்தக் கூடாது.
அனல் பறக்கும் மேடைப் பேச்சுகள், உத்வேகம் தரும் அறிக்கைகள், அலங்கார வார்த்தைகள் கொண்ட போஸ்டர்கள், பேனர்கள், கேலிச் சித்திரங்கள், பகடிகள் நிரம்பிய மீம்ஸ்கள் என வாக்காளர்களை ஈர்த்துக் கொண்டிருந்த பிரச்சார வடிவங்கள், நவீன, வல்லமை பொருந்திய ஏஐ தொழில்நுட்பத்தால் கேலிக்கூத்தாகிக் கொண்டிருக்கின்றன.
தலையிடுவார்களா தலைவர்கள்? - ஏஐ மூலம் பரப்பப்படும் மலின பிரச்சாரங்களைத் தடுப்பதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது குறைந்தபட்சம் அந்தந்த கட்சிகளில் ஐடி விங் செயலாளர்கள் அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது.
எதிர்க்கட்சியினர்தான் எதிரிக்கட்சியினர் அல்ல, ஆளுங்கட்சியை அம்பலப்படுத்துவதே நோக்கம், அசிங்கப்படுத்துவது அல்ல என்ற கட்சிகள் முடிவெடுத்தால், அதை முறையாக பின்பற்ற உத்தரவிட்டால் ஏஐ தொழில்நுட்பங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தலாம்.
கதைக்கு தேவைப்பட்டால் நான் கவர்ச்சியாக நடிப்பேன்; ஆனால் என்னைவைத்து டீப் ஃபேக் செய்வதை ஏற்க முடியாது என்ற ஒரு நடிகையின் கோபம் நியாயமானது என்றால், நாங்கள் பிரச்சாரத்தில் கடுமையாக விமர்சிப்போம் அதற்காக எங்களை மலினமாக சித்தரித்து ஏஐ வீடியோக்கள் / போட்டோகள் செய்வதை அனுமதிக்க முடியாது என்பதை அரசியல்வாதிகளும் ஆணித்தரமாக பதிவு செய்ய வேண்டும். அது சுயமரியாதை!
அதேபோல், என்னதான் தேர்தலுக்காக பணம் கொடுத்து துதிபாடிகளை பணியமர்த்தினாலும் கூட அவர்களுக்கும் குறைந்தபட்சம் இதுதான் நெறிமுறை என்று சொல்லிக் கொடுத்து வேலை வாங்கினால், பதிலுக்கு இன்னொரு கட்சி பரப்பும் மலின தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்பதை ஐடி விங்குகளும் உணர வேண்டும்.
ஆரோக்கியமான விமர்சனங்களாக அல்லாது சேற்றை மாறி மாறி இரைத்துக் கொள்வதால் யாருக்கும் லாபமிருக்காது. அதுவும், முதல் முறை வாக்காளர்களுக்கு நீங்கள் என்ன கடத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருப்பதே கட்சியை எதிர்காலத்திலும் வலுவாக வைத்திருப்பதற்கான அஸ்திவாரம். பொறுப்புடன் செயல்படுவார்களா சம்பந்தப்பட்டவர்கள்! இல்லை, ‘அதற்கும் எங்களுக்கு சம்பந்தமில்லை’ என்று மலினங்களை அள்ளித் தெளித்து பொறுப்புத் துறப்பார்களா?!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT