Published : 29 Jul 2025 03:10 PM
Last Updated : 29 Jul 2025 03:10 PM

பாஜகவை எதிர்க்க துணிந்த ஓபிஎஸ்... விஜய்யுடன் ‘மெகா’ கூட்டணி அமைக்க திட்டம்!

பாஜக தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால், வெகுண்டெழுந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதன் எதிரொலியாக, தனது அரசியல் வாழ்க்கையில் முதன்முறையாக பாஜகவுக்கு எதிராக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாஜகவை முற்றிலும் எதிர்க்கத் துணிந்துவிட்டாரா ஓபிஎஸ்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறையும் வரை அம்மா பக்தராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதன்பின்னர் முழுவதுமாக மோடி பக்தராக மாறிப் போனார். தர்மயுத்தத்தை தொடங்கியது, சசிகலாவின் அரசியலுக்கு முடிவுரை எழுதியது, தினகரனுக்கு ஸ்கெட்ச் போட்டது, எடப்பாடியோடு மீண்டும் கைகோத்தது, எடப்பாடியை விட்டு பிரிந்தது, தினகரன் - சசிகலாவோடு மீண்டும் சேர்ந்தது என கடந்த 10 ஆண்டுகளில் பல அவதாரங்களை பாஜகவின் ஆசியோடு எடுத்தவர்தான் ஓபிஎஸ்.

அதிமுக முற்றும் முழுதாக இபிஎஸ் கைக்கு சென்றபோதும் கூட ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக எதையுமே செய்யவில்லை பாஜக. பாஜகவின் வாக்கே வேதவாக்காக வாழ்ந்துவந்த ஓபிஎஸ்சை, பாஜக என்னவோ எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்குப் போடும் ஆளாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

எவ்வளவு அடி விழுந்தாலும் ‘மாணிக்கம்’ ரஜினி போல சிரித்துக்கொண்டே பாஜகவை ஆதரித்து வந்த ஓபிஎஸ், இப்போது வேறு வழியே இல்லாமல் ‘பாட்ஷா’ வாக மாறியிருக்கிறார். ஆனால், படம் ஓடுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணிக்குள் வரும் வரை எல்லாம் ஓரளவு நன்றாகவே போய்க்கொண்டிருந்தது பன்னீர்செல்வத்துக்கு. இபிஎஸ் கூட்டணிக்குள் வந்த பிறகு ஓபிஎஸ்சை தவிர்க்க ஆரம்பித்தது பாஜக தலைமை. அமித் ஷா இருமுறை தமிழகம் வந்தபோதும் ஓபிஎஸ்சை சந்திக்க அனுமதி கொடுக்கவில்லை.

அதேபோல இப்போது ‘உங்களை சந்திப்பது பாக்கியம்’ என்று கடிதம் எழுதியும் கூட, ஓபிஎஸ்சை சந்திக்க மறுத்துவிட்டார் பிரதமர் மோடி. இனி வேறு வழியே இல்லை என்பதை உணர்ந்து அடுத்த ஆப்ஷனை கையில் எடுத்துள்ளார் ஓபிஎஸ்.

இதனை தொடர்ந்துதான், சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 2024-2025-ஆம் ஆண்டுக்கான 2,151 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்காதது கல்வி உரிமைச் சட்டத்துக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது என மத்திய பாஜக அரசை ஓபிஎஸ் கடுமையாக கண்டித்துள்ளார். இந்த கண்டன அறிக்கை பாஜகவை முற்றிலுமாக எதிர்க்க அவர் துணிந்துவிட்டதை காட்டுகிறது.

இதனை பிரதிபலிக்கும் விதமாகவே, தவெக கூட்டணியில் ஓபிஎஸ் இணைய வேண்டும். பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் எனப் பேசியுள்ளார் பண்ருட்டி ராமச்சந்திரன். தற்போது ஓபிஎஸ்சும் இதே ரூட்டில்தான் பயணிக்க தயாராகியுள்ளார்.

கட்சியின் முதல் மாநாட்டிலே கூட்டணிக்கும் தயார், கூட்டணி ஆட்சிக்கும் தயார் என ஆசை காட்டினாலும், இதுவரை எந்தக் கட்சியும் தவெக பக்கம் வரவில்லை. எனவே ஓபிஎஸ் போல தமிழகம் முழுவதும் அறிமுகமான நபர் கூட்டணிக்கு வருவதை மறுக்க மாட்டார் விஜய்.

அதுவும் போக, விஜய்க்கு வட மற்றும் தென் மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு அதிகம். அதுபோல ஓபிஎஸ்சுக்கும் தென் மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு உள்ளது. எனவே, இருவரும் இணைந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும் என இரு தரப்புமே யோசிக்கலாம்.

மேலும், டிடிவி தினகரன், சசிகலா போன்றோரையும் விஜய் பக்கம் ஓபிஎஸ் கொண்டுவந்தால் தென் மாவட்டங்களில் கூட்டணிக்கு இன்னும் பூஸ்ட் கிடைக்கலாம்.

தவெக + ஓபிஎஸ் எனும் கவனிக்கத்தக்க அணி அமையும் பட்சத்தில், பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் கூட்டணிக்குள் வரலாம். ஒருவேளை இதுபோன்ற கூட்டணி அமைந்தால், அது நிச்சயமாக அதிமுக + பாஜக கூட்டணிக்கு பெரும் சவாலாக மாறும்.

தவெகவுடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்துவிட்டால், உடனடியாக புதிய கட்சியை தொடங்கும் சூழலுக்கு தள்ளப்படுவார் ஓபிஎஸ். புதிய கட்சியை தொடங்குவது, அதனை மக்களிடம் கொண்டு செல்வது போன்ற சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டும். புதிய கட்சியில் ஓபிஎஸ் பொறுப்பு வகித்தால், அதிமுகவை கைப்பற்ற அவர் தொடர்ந்த வழக்குகளை முன்னெடுக்க முடியாது. அதுபோல, பாஜகவும் வேறு வகைகளில் நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பிக்கும்.

இதுநாள் வரை பாஜகவின் விசுவாசியாக இருந்த ஓபிஎஸ், பாஜகவை ‘பாசிசக் கட்சி’ என விமர்சிக்கும் விஜய்யுடடு கூட்டணி சேர்வது எடுபடுமா?. ஒருவேளை இத்தகைய அணி அமைந்தால், விஜய்யுடன் சேர்ந்து ஓபிஎஸ்சும் பாஜகவை விமர்சிப்பாரா?. ஓபிஎஸ்சின் இந்த திடீர் ‘சீற்றம்’ தமிழக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x