Published : 29 Jul 2025 12:25 PM
Last Updated : 29 Jul 2025 12:25 PM
சென்னை: கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய வகையில் சிறிய கடைகளுக்கும் தொழில் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் இட்லிக்கடை, தேநீர்க்கடை உள்ளிட்ட 48 வகையான உற்பத்தித் தொழில்கள் செய்வதற்கும், தையல் தொழில், சலவைக்கடைகள் போன்ற 119 வகையான சேவைத் தொழில் செய்வதற்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கிராமப்புற பொருளாதாரத்தையும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை ஆகும். கிராமப்புற கடைகளுக்கு ரூ.250 முதல் ரூ.50 ஆயிரம் வரை உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக வருவாயும், லாபமும் தரக்கூடிய கடைகளுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்குவதில் தவறு இல்லை. ஆனால், வாழ்வாதாரத்திற்காக செய்யப்படும் தொழில் - வணிகத்திற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.
கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்திற்கான தங்களது வீட்டின் ஒரு பகுதியில் தேநீர்க்கடை, பெட்டிக்கடை ஆகியவற்றை அமைத்திருப்பார்கள். அதேபோல், ஆதரவற்ற மூதாட்டிகள், பிறரை எதிர்பார்த்திருக்கக் கூடாது என்ற சுயமரியாதை உணர்வுடன் இடலி சுட்டு விற்பது, மாலையில் வடை சுட்டு விற்பது போன்ற தொழில்களை செய்வார்கள். இதற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது பெரும் அநீதி. இது அவர்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக அழித்து விடும்.
கிராமப்புற கடைகள் உரிமம் பெறுவதுடன் மற்றும் இந்த நடவடிக்கை நின்று விடப் போவதில்லை. உரிமம் பெற்ற கடைகளுக்கு தமிழக அரசின் சார்பில் எந்த உதவியும் செய்யப்படாது. அதே நேரத்தில் உரிமம் வைத்திருப்பவர்களைத் தேடித் தேடி தொழில் வரி வசூலிக்கும் நடவடிக்கைகளில் உள்ளாட்சிகள் ஈடுபடும்.
வீடுகளில் சிறிய அளவில் நடத்தப்படும் பெட்டிக்கடை, இட்லிக்கடை ஆகியவற்றுக்கு உரிமம் பெறப்பட்டால், அதையே காரணம் காட்டி, அந்த வீட்டுக்கான மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்ற மின்வாரியம் முயலும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியையும், அதிகாரத்தையும் வழங்காமல் தன்னிடம் வைத்துக் கொள்ளும் திமுக அரசு, உள்ளாட்சிகளின் வருவாயைப் பெருக்குவதற்காக இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருப்பது குரூரமான நகைச்சுவை ஆகும்.
இந்த உரிமத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ’பாட்டிகளின் வடை கடைகள்’ வரலாற்றில் மட்டுமே இருக்கும்; நடைமுறையில் இருக்காது. எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT