Published : 29 Jul 2025 05:14 AM
Last Updated : 29 Jul 2025 05:14 AM
சென்னை: தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் வரை ஓயமாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 'மக்களைக் காப்போம்- தமிழகத்தை மீட்போம்' என்ற பயணத்தில் சுமார் 18.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்திருக்கிறேன்.
அவர்களைப் பார்த்து, அவர்களின் குறைகளைக் கேட்டு, அவர்களின் மனநிலையை அறிந்தேன். பொதுமக்கள் அனைவருமே ஸ்டாலினின் மக்கள் விரோத ஆட்சியில், அவர்கள் சந்தித்து வரும் வேதனைகளை எடுத்துரைத்தனர்.
இந்த ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த ஆட்சிக்கு குற்றங்களை கட்டுப்படுத்தத் தெரியவில்லை. மக்களே மக்களை பாதுகாத்துக் கொள்ளும் அவலமான ஆட்சி நடக்கிறது.
காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை. திமுக ஆட்சியின்மீது வெறுப்பிலும், கடும் கோபத்திலும் உள்ளனர். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். இந்த மோசமான தீய ஆட்சிக்கு முடிவுகட்டி நல்லாட்சியைத் தர வேண்டும் என என்னைச் சந்தித்த அனைவரும் கேட்டுக்கொண்டனர்.
தாலிக்குத் தங்கம் திட்டத்தை தாய்மார்களும், பெண்களும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் செயல்படுத்தக் கேட்டுக்கொண்டனர். அதனுடன் பட்டுச் சேலை வழங்கப்படும் என்ற மங்களகரமான அறிவிப்பையும் வெளியிட்டேன்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, ஆட்சியின் பாதிக் காலத்தை தாண்டிய பிறகு கொடுத்தாக தாய்மார்கள் கோபத்துடன் கூறுவதை எனது பயணத்தில் கண்டேன். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தொகை அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பால் தாய்மார்கள் அகம் மகிழ்ந்தனர்.
அதிமுக சார்பில் 'திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக' என்ற புதிய பிரச்சார திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். திமுக ஆட்சியின் அவலங்களை ரிப்போர்ட் கார்டாக மக்கள் பூர்த்தி செய்து வழங்க உள்ளனர். திமுக ஆட்சியின் பொய்யான வாக்குறுதிகளையும், திறனற்ற ஆட்சியையும் கண்டு, தமிழக மக்களின் உள்ளம் திமுகவை வீட்டுக்கு அனுப்ப ஒன்றுபட்டுவிட்டது.
அதற்கான நாட்களையும் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். வானளாவிய வெற்றிபெற்ற எனது எழுச்சிப் பயணம் தொடரும். தமிழக மக்களுக்கு நிம்மதியான நல்லாட்சியை வழங்கும்வரை நான் ஓயப்போவதில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT