Published : 28 Jul 2025 07:30 PM
Last Updated : 28 Jul 2025 07:30 PM
சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற கங்கைகொண்ட சோழபுரம் நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டதில் எந்த திருப்புமுனையும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். இதில் எந்த அரசியலும் இல்லை.
தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்பது மரபாகவும், நாகரிக அரசியலாகவுமே விசிக பார்க்கிறது. ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “பிரதமர் மேடையில் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை” என்று சொல்லியிருக்கிறார். இதில் எந்த திருப்புமுனையும் இல்லை.
விசிக எப்போதும் சனாதன எதிர்ப்பில் சமரசம் செய்யவே மாட்டோம். சனாதனத்தை நிறுவ முயலும் பாஜகவுடன் அரசியல் ரீதியான எந்த உறவும் வைக்க மாட்டோம் என திருமாவளவன் பிரகடனப்படுத்திய பிறகும் ஒருவித குழப்பம் மற்றும் நம்பிக்கையற்ற சூழலிலே அதிமுக இருப்பதை ராஜேந்திர பாலாஜி உணர்த்துகிறார்.
2026-ல் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத அளவுக்கு அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள் என்பது உறுதி. தமிழகத்துக்கும் மக்களுக்கும் துரோகம் செய்துவரும் அதிமுக - பாஜகவை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று வன்னியரசு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT