Published : 27 Jul 2025 09:15 PM
Last Updated : 27 Jul 2025 09:15 PM
ராணிப்பேட்டை: “நான் முதல்வர் பதவிக்கு தகுதி இல்லாதவனா?” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆவேசமாகப் பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிறுத்தம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதச்சார்பின்மை காப்போம் தீர்மானம் விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றுப் பேசும்போது, “இந்து மதத்தை எதிர்ப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் அல்ல. ஆனால், மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்காத ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை கண்டிப்போம்.
பாஜக மதம் அடிப்படையில் அரசியல் நடத்துகிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பு அரசியல் பரப்புகிறது. அரசாங்கத்துக்கே மதம் வேண்டும் என பாஜக செயல்படுகிறது. ஆனால், அம்பேத்கர் மதம் மக்களுக்கானது. அரசாங்கத்துக்கானது இல்லை என இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அமைத்துள்ளார். மேலும், எந்த காலத்திலும் தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நுழைய விடக்கூடாது. திமுகவை புதியதாக வந்தவர்கள் யாரும் (தவெக தலைவர் விஜய்) எதிர்த்து விடமுடியாது. அந்த கட்சியை எதிர்த்தவர்களான எம்ஜிஆர், வைகோவை அவர்கள் பார்த்துவிட்டார்கள்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்று முன்னாள் முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் பாஜகவின் கூட்டணியிலிருந்து இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்வது வேடிக்கையாக உள்ளது. மதச்சார்பின்மை கடைப்பிடிக்கும் அரசுடன் தான் தற்போது கைகோர்த்துச் செயல்பட்டு வருகிறோம். அவர்களுடன் தான் விசிக கூட்டணியில் இருக்கும். நாம் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் மதச்சார்பற்ற அரசு.
துணை முதல்வர் பதவி கொடுத்தால் வேண்டாமா என்று என்னையே கேட்கிறார்கள். எனக்கு கோபம் வருமா, வராதா? ஏன்... நான் முதல்வர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? யார் யாரோ கிளம்புகிறார்கள். நானும் ரவுடிதான் என்ற வாசகத்துக்கு ஏற்ப, தமிழகத்தில் புதிதாக உருவானவர்கள் எல்லாம் தன்னை முதல்வர் ஆக்குங்கள் என்று கேட்கும்போது, நான் 35 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கிறேன்.
25 வருடங்களாக தேர்தல் அரசியலில் இருக்கிறேன். கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் உடன் அரசியல் செய்த அனுபவம் உண்டு. ஆனால், என்னை மட்டும் ஏன் துணை முதல்வர் பதவிக்கு கேட்கிறீர்கள். அதற்கு என்ன காரணம் என்றால், ஆசைக் காட்டினால் நான் போய்விடுவேன் என்று நினைக்கிறார்கள்” என்று திருமாவளவன் பேசினார்.
இராணிப்பேட்டையில் விசிக சார்பில் நடைபெற்ற மதச்சார்பின்மை காப்போம் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை... pic.twitter.com/7jYN9StjP2
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT