Published : 27 Jul 2025 05:19 PM
Last Updated : 27 Jul 2025 05:19 PM
சென்னை: “தமிழகத்தில் முதல்வர் உட்பட நம்பிக்கையுடன் சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு அரசு மருத்துவமனைகள் இல்லையே என்பதுதான் எனது ஆதங்கம்” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ தமிழகத்தில் அனைத்து மருத்துவமனையிலும் மக்களுக்கான முழுமையான வசதி இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். நான் எப்போதெல்லாம் நிர்வாகத்தில் இருந்தேனோ அப்போதெல்லாம் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துதற்காக தனிக் கவனம் செலுத்தியிருக்கிறேன்.
புதுச்சேரியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மூன்று குழந்தைகள் பேருந்து மோதி படுகாயம் அடைந்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஆபத்தான நிலையில் அவர்கள் இருந்தார்கள். அந்தக் குழந்தைகளின் பெற்றோர், எப்படியாவது குழந்தைகளை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விடுகிறோம்.
எங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தாருங்கள் என்று சொன்னார்கள். துணை நிலை ஆளுநராக குழந்தைகளின் நிலையைக் கண்டு, உடனே அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குழந்தைகள் பிழைப்பார்கள் என்பதை உணர்ந்து அவர்கள் பெற்றோர்களிடம் நீங்கள் தனியார் மருத்துவமனையில் தேடும் அத்தனை வசதிகளும் இங்கே இருக்கிறது. எங்களால் குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்று உறுதியாகச் சொன்னேன். அங்குள்ள அதிகாரிகளும் மருத்துவர்கள் கூட சற்று தயங்கினார்கள்.
குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் நம் மீது பழி சொல்வார்கள் என்றார்கள். அதற்காக குழந்தைகளை பலியாக்க முடியாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். மூன்று குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை நடந்தது. குழந்தைகள் பிழைத்தார்கள். இத்தகைய நிலையில் அரசு மருத்துவமனைகள் செயலாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்.
ஆனால், தமிழகத்தில் முதல்வர் உட்பட நம்பிக்கையுடன் சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு அரசு மருத்துவமனைகள் இல்லையே என்பதுதான் எனது ஆதங்கம். கோடீஸ்வரர்களுக்கு கிடைக்கும் சிகிச்சை, கோடியில் வாடிக் கொண்டிருக்கும் சாமானியனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது ஆதங்கம்.
புதுச்சேரியில் தடுப்பூசி போடப்பட்டபோது கூட, அதை அரசு மருத்துவமனைக்குச் சென்றுதான் நான் போட்டுக் கொண்டேன். அந்த நிலை தமிழகத்தில் ஏன் இல்லை என்றுதான் எனது ஆதங்கம். ஏழையின் இதயத்துக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பு அரசு மருத்துவமனையில் கிடைக்கவில்லை. அதை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே முதல்வரும் செல்லும் அளவுக்கு அரசு மருத்துவமனைகள் இருக்க வேண்டும். அப்போலோ தரத்துக்கு அரசு மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை தான் நான் வெளிப்படுத்துகிறேன். தவிர இதில் அரசியல் இல்லை” என்று தமிழிசை கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT