Published : 27 Jul 2025 04:38 PM
Last Updated : 27 Jul 2025 04:38 PM
ஈரோடு: பவானிசாகர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டிய நிலையில், அணையில் இருந்து பவானி ஆற்றில், 20 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்படுகிறது. இதையொட்டி, பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையில் 105 அடி வரை 32.8 டிஎம்சி நீரினைத் தேக்கி வைக்க முடியும். பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர் மழைபெய்து வருவதால், அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை எதிரொலியாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம், இன்று (27-ம் தேதி) காலை 10 மணியளவில் 100 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, பவானி ஆற்றின் 9 கண் மதகு திறக்கப்பட்டு, பவானி ஆற்றில் 20 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பவானி சாகர் அணையில் 105 அடி வரை நீர் தேக்க முடியும். இருப்பினும், பருவமழைக் காலங்களில் அணையின் நீர் வரத்திற்கு ஏற்ப, நீர் தேக்குவது தொடர்பான அணை பாதுகாப்பு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜூலை 31-ம் தேதி வரை, 100 அடிவரை அணையில் நீரினைத் தேக்கி வைக்கலாம்.

அதேபோல், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 102 அடியும், நவம்பர் 1-ம் தேதி முதல் 105 அடியும் பவானிசாகர் அணையில் நீர் தேக்கி வைக்கலாம். இந்த விதிமுறைகளின்படி, தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால், அணைக்கான நீர்வரத்து முழுமையாக, பவானி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்படுகிறது.
இதையடுத்து, பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நீர் இருப்பு நிலவரம்: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று பகல் 12 மணி நிலவரப்படி, 100.04 அடியாகவும், நீர் இருப்பு 28.75 டிஎம்சியாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 20 ஆயிரத்து 368 கன அடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையில் இருந்து பவானி ஆற்றில் 20 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்படுகிறது. தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT