Last Updated : 27 Jul, 2025 03:50 PM

1  

Published : 27 Jul 2025 03:50 PM
Last Updated : 27 Jul 2025 03:50 PM

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள்: பிரதமர் மோடி உறுதி

அரியலூர்: ராஜராஜ சோழன் மற்றும் அவரது மைந்தன் ராஜேந்திர சோழன் இருவருக்கும் பிரம்மாண்ட சிலைகள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று உறுதி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்​டம் கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயில் வளாகத்​தில், மத்​திய கலா​ச்சா​ரத் துறை சார்​பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திரு​வா​திரை விழா, கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயில் கட்​டத் தொடங்கிய ஆயிர​மாவது ஆண்டு விழா, தென்​கிழக்கு ஆசிய நாடு​களின் மீது படையெடுத்​துச் சென்ற ஆயிர​மாவது ஆண்டு நிறைவு விழா என முப்​பெரும் விழா நடை​பெற்றது.

இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ‘வணக்கம் சோழ மண்டலம்’ என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். “நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்று தமிழில் சிவனைப் போற்றினார்.

பின்னர் அவர் பேசியதாவது: “பிரகதீஸ்வரரின் பாதங்களில் அமர்ந்து வணங்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. 140 கோடி இந்தியர்களின் நலனுக்காகவும், இந்தியாவின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காகவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலில் நான் பிரார்த்தனை செய்தேன். அனைவருக்கும் சிவபெருமானின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

சோழ மன்னர்கள் இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளுடன் தங்கள் ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை கணிசமாக மேம்படுத்தினர். நான் நேற்று மாலத்தீவிலிருந்து திரும்பியது ஒரு தற்செயல் நிகழ்வு. இன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம்.

சோழப் பேரரசு இந்தியாவின் பொற்காலங்களில் ஒன்று என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். சோழப் பேரரசு இந்தியாவின் ஜனநாயகத்தின் தாய் என்ற பாரம்பரியத்தையும் முன்னெடுத்துச் சென்றது. ஜனநாயகத்தின் பெயரால் பிரிட்டனின் மாக்னா கார்ட்டாவைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் பேசுகிறார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, சோழப் பேரரசில் ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட்டன.

பிரிட்டனுக்கு முன்பாகவே சோழர்கள் குடவோலை முறையில் ஆட்சி செய்தனர். தங்கம், வெள்ளி அல்லது கால்நடைகளை மற்ற நாடுகளிலிருந்து கொண்டு வந்த பல மன்னர்களைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். ஆனால் ராஜேந்திர சோழன் கங்கை நதிநீரை கொண்டு வந்தார்.

இன்று மீண்டும் காசியிலிருந்து கங்கை நீர் இங்கு கொண்டுவரப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் காசியிலிருந்து வந்த மக்கள் பிரதிநிதி. எனக்கு கங்கைத் தாயுடன் பிணைப்பு உள்ளது. சோழ மன்னர்களின் இந்த செயல்பாடுகள், அவர்களுடன் தொடர்புடைய இந்த நிகழ்வு 'ஒரே பாரதம், சிறந்த பாரதம்' என்ற மாபெரும் பாரம்பரியத்துக்கான புதிய ஆற்றல், புதிய சக்தி, புதிய உத்வேகத்தை அளிக்கின்றன.

இன்று உலகமே நிலையற்ற தன்மை, வன்முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிரச்சினைகளால் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், தீர்வுகளுக்கான பாதையை சைவ சிந்தாந்த கொள்கைகள் நமக்குக் காட்டுகின்றன. அன்பே சிவம் என்ற திருமூலரின் கருத்தை உலகம் ஏற்றுக்கொண்டால், பெரும்பாலான நெருக்கடிகள் தானாகவே தீர்க்கப்படும். இந்தியா இந்தக் கருத்தை ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற வடிவத்தில் முன்னெடுத்துச் செல்கிறது.

சோழர்கள் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார மற்றும் ராணுவ உயரங்கள் இன்றும் நம்மை ஊக்குவிக்கின்றன. ராஜராஜ சோழன் ஒரு சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். அதை ராஜேந்திர சோழன் மேலும் வலுப்படுத்தினார். சோழப் பேரரசு வளர்ந்த இந்தியாவிற்கான ஒரு பண்டைய வரைபடத்தைப் போன்றது. நீர் மேலாண்மையில் சோழர்கள் முன்னோடியாகத் திகழ்ந்தனர். 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்பதை உருவாக்க வேண்டுமானால், நமது கடற்படை, பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்தி புதிய வாய்ப்புகளை ஆராய வேண்டும் என்று அது நமக்குச் சொல்கிறது.

வரவிருக்கும் காலங்களில் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மைந்தன் ராஜேந்திர சோழன் இருவருக்கும் பிரம்மாண்ட சிலை தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். இன்றைய இந்தியா தனது பாதுகாப்பை மிக முக்கியமானதாகக் கருதுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை யாராவது தாக்கினால், இந்தியா அதன் சொந்த மொழியில் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை ஆபரேஷன் சிந்தூரின் போது உலகம் கண்டது.

இந்தியாவின் எதிரிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு உலகில் பாதுகாப்பான இடம் இல்லை என்பதை ஆபரேஷன் சிந்தூர் தெளிவுபடுத்தியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ஒரு புதிய உத்வேகத்தைத் தூண்டியுள்ளது. புதிய தன்னம்பிக்கையை விதைத்துள்ளது. நாடு முழுவதும் மக்கள் அதனை கொண்டாடுகிறார்கள். அது இந்தியாவின் வலிமையையும் உறுதியையும் உலகமே ஒப்புக்கொள்ள வைத்துள்ளது” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x