Published : 27 Jul 2025 08:53 AM
Last Updated : 27 Jul 2025 08:53 AM
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.63 லட்சத்தில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்படுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்.பி. மாங்குடி எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் ரூ.65 லட்சத்தில் கட்டப்பட்ட டயாலிசிஸ் மையத்தை ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மகாராஷ்டிர மாநிலத்தில் போலி வாக்காளர்களை சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பிஹாரில் போலி வாக்காளர்களை சேர்க்க முடியாமல் போனதால், அதற்குப் பதிலாக வாக்காளர்களை நீக்கியுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியலை திருத்தியது தவறு. 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மிகப்பெரிய மோசடி. அந்த மாநிலநிரந்தர குடியுரிமையுள்ள பலர் வெவ்வேறு மாநிலங்களில் பணி செய்கின்றனர். அவர்கள் தேர்தலுக்கு வாக்களிக்க பிஹாருக்கு செல்ல மாட்டார்களா?
மக்களவை தேர்தல் முடிந்த 12 மாதங்களுக்குள் 22 லட்சம் பேர் இறந்துவிட்டார்களா? போலி வாக்குப் பதிவை தடுக்க வேறு வழிகள் உள்ளன. தேர்தல் ஆணையம் புல்டோசர் வைத்து, வாக்காளர் பட்டியலை மாற்றம் செய்கிறது. அதற்குத் தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT