Published : 27 Jul 2025 12:58 AM
Last Updated : 27 Jul 2025 12:58 AM
திருச்சி: கங்கைகொண்டசோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தூத்துக்குடியில் நேற்று இரவு ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் வந்தடைவார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக 10 மணிக்கே திருச்சி வந்து சேர்ந்தார் பிரதமர். விமான நிலையத்தில் அவரை அமைச்சர் கே.என்.நேரு, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.காமராஜ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், துரை வைகோ எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், பிரதமர் மோடி அங்கிருந்து காரில் புறப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கோர்ட்யார்ட் மாரியாட் ஓட்டலில் தங்கினார். இன்று(ஜூலை 27) காலை 11 மணிக்கு ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகண்ட சோழபுரம் செல்கிறார். அங்கு நடைபெறும் ராஜேந்திர சோழன் ஆடித்திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.
மீண்டும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளம்பும் பிரதமர் மோடி, திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். இங்கிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி, அவரது சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்பிஜி) டிஐஜி விமுக்த் நிரஞ்சன் தலைமையிலான அதிகாரிகள், திருச்சி விமானநிலையம், பிரதமர் தங்கும் ஓட்டலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பும், ஓட்டலில் 6 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் சுமார் 1,400 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமரின் திருச்சி வருகையையொட்டி, விமான நிலையம் அருகே உள்ள கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் முன்பு துணிகளாலான திரை கொண்டு மறைக்கப்பட்டது. இதனால் பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்ததால், முகாம் முன்பு அமைக்கப்பட்டிருந்த திரைகள் நேற்று அகற்றப்பட்டன. விமான நிலையத்தில் இருந்து பிரதமர் வந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று மதியம் வரை மூட போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், விமான நிலையம் மற்றும் ஆட்சியர் அலுவலக சாலையை சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் ஓட்டல்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி இன்று காலை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் ஏதாவது ஒரு ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி பயணிப்பார் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT