Last Updated : 26 Jul, 2025 06:36 PM

7  

Published : 26 Jul 2025 06:36 PM
Last Updated : 26 Jul 2025 06:36 PM

“பிஹாரில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மிகப் பெரிய மோசடி” - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

திருப்பத்தூர்: பிஹாரில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மிகப் பெரிய மோசடி என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.63 லட்சத்தில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்பி, மாங்குடி எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கார்த்தி சிதம்பரம் எம்பி, பேசுகையில், “ஐந்து சதவீத மக்கள் தொகை கொண்ட தமிழகம், நாட்டுக்கு 12 சதவீத மருத்துவர்களை உருவாக்கி வருகிறோம். இது தொடர வேண்டும் என்றால் தமிழகம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் தமிழர்களுக்கு இருக்க வேண்டும்” என்றார்.

பின்னர் ப.சிதம்பரம் பேசியவது: “இருபது ஆண்டுக்களுக்கு முன், இந்த அளவுக்கு சிறுநீரகம் பாதிப்பட்டோர் இல்லை. ஆனால், தற்போது 100 பேரில் ஒருவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதற்கு இப்பகுதியில் கிடைக்கும் தண்ணீர்தான் காரணமா என்று தெரியவில்லை.

அரசு கட்டிடங்கள் குறைந்தது 50 ஆண்டுகள் நிலைத்திருக்கும் வகையில் தரமாக கட்ட வேண்டும். புதிதாக கட்டப்பட்ட பாலங்கள், கட்டிடங்கள் 4 நாட்களில் இடிந்து விழுகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லணை, தாஜ்மஹால் இன்றும் நிலைத்து நிற்கின்றன. கட்டிடக் கலை மீது பழுது இல்லை, கட்டிட கலைஞர்கள் மீதுதான் பழுது உள்ளது. கட்டிடக் கலை விதிப்படி ஒப்பந்ததாரர் கட்டிடத்தை கட்டினால் நிச்சயம் 50 ஆண்டுகள் கட்டிடம் நிலைத்து நிற்கும்” என்று பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறும்போது, “மகாராஷ்டிரா மாநிலத்தில் போலி வாக்காளர்களை சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் பிஹாரில் செய்ய முடியாமல், வாக்காளர்களை நீக்கியுள்ளனர். தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன், வாக்காளர் பட்டியலை திருத்தியது தவறு. 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கியது மிகப் பெரிய மோசடி.

மேலும், அம்மாநில நிரந்தர குடியுரிமையுள்ள பலர் வெவ்வேறு மாநிலங்களில் பணி செய்கின்றனர். அவர்கள் தேர்தலுக்கு வாக்களிக்க பிஹாருக்கு செல்ல மாட்டார்களா? மக்களவைத் தேர்தல் முடிந்த 12 மாதத்துய்க்குள் 22 லட்சம் பேர் இறந்துவிட்டார்களா? இந்த வாக்காளர் பட்டியலை வைத்துதானே மோடி பிரதமரானார்.

போலி வாக்குப்பதிவை தடுக்க வேறு வழிகள் உள்ளன. தேர்தல் ஆணையம் புல்டோசர் வைத்து வாக்காளர் பட்டியலை மாற்றம் செய்கிறது. அதற்குத்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். தமிழக முதல்வரும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றி. தேர்தல் ஆணையத்துக்கு மட்டும் புத்தி இருக்கு. எதிர்ப்பு தெரிவிப்போருக்கு புத்தி பேதலிச்சு போச்சா?” என்று ஆவேசமாக கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x