Published : 26 Jul 2025 05:54 PM
Last Updated : 26 Jul 2025 05:54 PM

ஸ்டிக்கர் முதல் பூத் கமிட்டி வரை: களத்தில் சொதப்புகிறதா விஜய்யின் தவெக?

‘2026-ல் விஜய்தான் முதல்வர்’ என்ற ஒரே முடிவோடு களமிறங்கியிருக்கிறது தவெக. ஒருபக்கம் உறுப்பினர் சேர்க்கை, இணையவழி பிரச்சாரம் என தூள் கிளப்பினாலும், மறுபக்கம் பூத் கமிட்டி குளறுபடிகள், புஸ்ஸி ஆனந்த் ஸ்டிக்கர் என சொதப்பல்களும் தொடர்கதையாகி இருக்கிறது. வரும் தேர்தலுக்குள் அரசியல் பணிகளில் தவெக தேர்ச்சிப் பெற்றுவிடுமா எனப் பார்ப்போம்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்களே இருக்கும் நிலையில், தவெக தரப்பு களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது வரை 80 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்த்துவிட்டதாக சொல்கிறது தவெக வட்டாரம். உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்யேக செயலியை வடிவமைத்து, அதற்கான பணியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

தவெக தனித்து போட்டியா, கூட்டணியா என இன்னும் முடிவாகாத நிலையில், செயற்குழு கூட்டத்தில் ‘விஜய்தான் முதல்வர் வேட்பாளர்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்’ என்ற பிரசாரத்தை மக்களிடையே பிரபலமடைய செய்ய, தமிழகம் முழுவதும் வீடு வீடாக ஸ்டிக்கர் ஓட்டி பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். அதேபோல், சமூக வலைதளங்களிலும், ‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்’ என்ற பிரச்சாரத்தை தவெக வேகப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்தான், ஸ்டிக்கர் விவகாரத்தால் கும்பகோணத்தில் பெரும் களேபரமே உருவாகியுள்ளது. அதாவது ‘முதல்வர் வேட்பாளர் விஜய்’ எனும் ஸ்டிக்கரில் விஜய் படத்துக்கு சரிபாதி நிகராக, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தின் படம் இடம்பெற்றது பெரும் சலசலப்பை உருவாக்கியது. இந்த விவகாரம் இணையத்திலும் பெரும் வைரலானது. ‘முதல்வர் விஜய்... துணை முதல்வர் ஆனந்த்’ என்பதால்தான் இருவரும் உள்ள படங்கள் ஒட்டப்படுகிறதா என ட்ரோல்கள் பறந்தன.

இந்த விவகாரம் தலைமையையும் எட்டிய நிலையில், தவெக பிரச்​சார ஸ்டிக்​கர்​களில் புஸ்ஸி ஆனந்த் படத்தை நீக்​கி​விட்​டு, விஜய் படம் மட்​டும் இடம்பெற வேண்டுமென தலைமை உத்​தர​விட்​டது. இதனையடுத்து ஸ்டிக்கரில் ஆனந்த் படத்தை நீக்கி விட்​டு, விஜய் படம் மட்​டும் உள்ள புதிய ஸ்டிக்​கரை அக்கட்சியினர் அச்​சிட்​டு, வீடு​களில் ஏற்​கெனவே ஸ்டிக்​கர் ஒட்​டப்​பட்​டிருந்த ஸ்டிக்​கருக்கு மேல் ஒட்டி வரு​கின்​றனர்.

அதேபோல, தவெக பூத் முகவர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள குளறுபடிகளும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பூத் கமிட்டிகளை முழுமைப்படுத்த வேண்டும் என சமீபத்தில் நடந்த தவெக செயற்குழுவில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, பூத் கமிட்டி முகவர்கள் நியமனங்களை முடித்து, மாவட்ட நிர்வாகிகள் தலைமையிடம் பட்டியலை வழங்கினர். அந்தப் பட்டியலை ஆய்வு செய்து, ஆலோசனை நடத்திய விஜய், முகவர்கள் நியமனத்தில் குளறுபடிகள் நடைபெற்றிருப்பதை கண்டறிந்தார்.

அதாவது, ஒருவர் இரண்டு, மூன்று பூத்களில் முகவராக இருப்பது, பூத்துக்கு தொடர்பில்லாதவர்களை முகவர்களாக நியமனம் செய்து கணக்கு காட்டியிருப்பது என தளபதிக்கே தண்ணி காட்டியுள்ளனர் தவெக நிர்வாகிகள். இதனால், அதிருப்தி அடைந்த விஜய், பூத் முகவர்கள் நியமனத்தில் நடந்த குளறுபடிக்கு பொறுப்பான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், பூத் முகவர்கள் நியமனத்தில் நடந்த குளறுபடிகளை சரிசெய்து, ஒவ்வொரு பூத்திலும் சரியான நபர்களை மட்டும் முகவர்களாக நியமிக்க வேண்டும் எனவும் கறார் காட்டியுள்ளார்.

தேர்தலுக்கு தயார்படுத்தும் விதமாக பூத் வாரியாக குழுக்கள், ஒன்றிய, தொகுதி வாரியாக கூட்டங்கள், மாவட்ட, மண்டல வாரியாக மாநாடு என அரசியல் கட்சிகள் இப்போதே பிஸியாகி விட்டன. ஆனால், பூத் கமிட்டிகளையே இன்னும் முறையாக அமைக்காவிட்டால் எப்படி அடுத்த கட்டத்துக்கு நகர்வது என்ற கேள்வியும் கட்சிக்குள்ளேயே எழுந்துவிட்டது.

அதுமட்டுமின்றி கட்சி கூட்டணியோடு களமிறங்குமா அல்லது தனித்து களமிறங்குமா என்பதற்கான தெளிவான பதிலும் இதுவரை தவெக தலைமையால் சொல்லப்படவில்லை. எனவே, எப்படி தேர்தலுக்கு தயாராவது என்ற கேள்வியும் இப்போது வரை மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் உள்ளது.

கூட்டணி அமைத்தாலும் சரி, தனித்துப் போட்டியிட்டாலும் சரி , இப்போதே தொகுதி வாரியாக தேர்தலில் போட்டியிட தகுதிவாய்ந்த 3 பேர் கொண்ட பட்டியலை பெரும்பாலான கட்சிகள் தயார் செய்து விட்டன. அதுபோன்ற பணிகளை மேலிடம் தொடங்கிவிட்டதா என்ற தெளிவு இல்லாமல் களத்தில் தவிக்கின்றனர் தவெக நிர்வாகிகள்.

விஜய் செல்லும் இடம் எல்லாம் கூட்டம் கூடுகிறது, இணையத்தில் விஜய் பேரை சொன்னால் விசில் பறக்கிறது. ஆனால், களத்தில் என்ன நடக்கிறது என்பதுதான், தேர்தல் வெற்றிக்கு முக்கியமானது. அந்த வகையில், ‘முதல்வர் வேட்பாளர்’ கனவில் இருக்கும் விஜய், அதற்கேற்ப களத்தை தயார்படுத்துகிறாரா என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x