Published : 26 Jul 2025 08:38 AM
Last Updated : 26 Jul 2025 08:38 AM
சமூக நீதி, வன்முறையில்லா வாழ்வு, வேலை, விவசாயம் மற்றும் உணவு, வளர்ச்சி, கல்வி உள்ளிட்ட 10 வகையான அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்து தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும், தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமதாஸின் பிறந்த நாளான நேற்று (ஜூலை 25) தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்கப்போவதாக அன்புமணி அறிவித்தார்.
'உரிமை மீட்க... தலைமுறை காக்க' என்ற இலச்சினையையும், ‘ உரிமைப் பயணம் ’ என்ற தலைப்பில் பிரச்சார பாடலையும் அன்புமணி வெளியிட்டார். இதனையடுத்து இந்த நடைபயணத்தால் வடதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்றும், தனது அனுமதியின்றி பாமக பெயர், கொடியை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் மனு அளித்தார். எனினும், திட்டமிட்டபடி நேற்று திருப்போரூரில் நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி. முருகன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
இந்த நிலையில், ராமதாஸ் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த விவரங்களை மேற்கோள் காட்டிய தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், தமிழகத்தில் உள்ள காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இந்த நடைபயணத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, “அன்புமணியின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்துக்கு தடை இல்லை. அவரது நடைபயணம் திட்டமிட்டபடி தொடரும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “ராமதாஸின் வழியில் அவரது கனவுகளை நிறைவேற்றவே நடைபயணம் மேற்கொள்கிறேன். மக்களுக்கு உரிமை தராத திமுக அரசை இந்த நடைபயணம் வீட்டுக்கு அனுப்பும். 10 உரிமைகளை முன்வைத்து நடைபயணம் மேற்கொள்கிறேன்.
ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கால்ஷீட் கொடுத்து, ஆக்ஷன் என்றதும் முதல்வர் நடிக்கிறார். பெண்களுக்கு ரூ.1,000 கொடுத்தால் உரிமை கிடைக்குமா. அது டாஸ்மாக்குக்குச் செல்கிறது. வேளாண் துறையில் வளர்ச்சி மைனஸ் 0.12 சதவீதமாக இருப்பது வெட்கக்கேடானது. சுயமரியாதையுடன் வாழ்வதற்கான சமூக நீதியை உருவாக்குவோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT