Last Updated : 26 Jul, 2025 09:13 AM

2  

Published : 26 Jul 2025 09:13 AM
Last Updated : 26 Jul 2025 09:13 AM

சத்யா வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையை அனுப்பியது யார்? - சம்பத் மீது சந்தேகக் கொக்கி போடும் ஆதரவாளர்கள்

வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக கடந்த ஒரு வருடத்தில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறார் பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான சத்யா பன்னீர்செல்வம். ஆளும் கட்சி மட்டுமல்லாது சொந்தக் கட்சியினரும் சத்யாவின் வளர்ச்சியை ரசிக்கவில்லை. அதனால் தான் அவரை சுற்றிச் சுற்றி அடிக்கிறார்கள் என்கிறார்கள் சத்யாவின் ஆதரவாளர்கள்.

சத்யா பன்​னீர்​செல்​வம் 2016-ல் பண்​ருட்டி எம்​எல்​ஏ-​வாக தேர்​வான நாளில் இருந்தே அவருக்​கும் கடலூர் வடக்கு மாவட்ட அதி​முக செய​லா​ள​ரான முன்​னாள் அமைச்​சர் எம்​.சி.சம்​பத்​துக்​கும் அவ்​வள​வாய் ஒத்​துப்​போக​வில்​லை. மணல் பிரச்​சினை​யில் இவர்​களுக்​குள் ஏற்​பட்ட மனக்​கசப்பு மல்​லுக்​கட்​டாக மாறிய​தால் 2021 ஏப்​ரலில் சத்யா பன்​னீர்​செல்​வத்​தைக் கட்​சியி​லிருந்தே நீக்​கி​னார் இபிஎஸ். அப்​போதே, “எம்​.சி.சம்​பத், (சிதம்​பரம்) எம்​எல்​ஏ-​வான பாண்​டியன், சொரத்​தூர் ராஜேந்​திரன் ஆகி​யோரை நான் வணங்​கும் சிவனும் ஜெயலலி​தா​வின் ஆன்​மா​வும் ஒரு​போதும் மன்​னிக்​காது” என சாபம் விட்​டார் சத்யா பன்​னீர்​செல்​வம்.

இந்த நிலை​யில், 2021-ல் பண்​ருட்டி தொகு​தியை திமுக கூட்​டணி கைப்​பற்​றியது. இதையடுத்​து, கடந்த ஆண்டு சத்யா பன்​னீர்​செல்​வத்தை மீண்​டும் கட்​சி​யில் சேர்த்து மாநில மகளிரணி துணைச் செய​லா​ள​ராக்​கி​னார் இபிஎஸ். இதையடுத்​து, மீண்​டும் கட்​சிக்​குள் தனது செல்​வாக்கை புதுப்​பித்​துக் கொண்ட சத்யா பன்​னீர்​செல்​வம், ஜூலை 13-ம் தேதி பண்​ருட்டி வந்த இபிஎஸ்​ஸுக்கு கூட்​டத்​தைத் திரட்டி பிரம்​மாண்ட வரவேற்​புக் கொடுத்து அசத்​தி​னார்.

இதைப் பார்த்​து​விட்டு உற்​சாக​மான இபிஎஸ், “கடந்த 5 நாட்​களாக 11 தொகு​தி​களில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டிருக்​கிறேன். ஆனால், எங்​குமே இவ்​வளவு கூட்​டம் கூட​வில்​லை. இந்த எழுச்சி அதி​முக வெற்​றிக்​கான அறிகுறி” என்று சத்யா பன்​னீர்​செல்​வத்​தை​யும் தன்​னருகே வைத்​துக் கொண்டு சொன்​னார். அப்​போது கூடவே நின்ற எம்​.சி.சம்​பத் இதற்கு எந்​த​வித​மான ரியாக் ஷனும் காட்​ட​வில்​லை.

சத்யா பன்னீர்செல்வம்

இந்த நிலை​யில், ஜூலை 18-ம் தேதி அதி​காலை​யில் சத்யா பன்​னீர்​செல்​வம் வீட்​டுக் கதவை தட்​டியது லஞ்ச ஒழிப்​புத் துறை. வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்​துச் சேர்த்​த​தாக பதி​வான வழக்​கில் சோதனை என்று சொன்​னதும் பதற்​ற​மான சத்யா பன்​னீர்​செல்​வம் மயக்​க​மா​னார். 10 ஆண்டு காலம் அமைச்​ச​ராக இருந்த எம்​.சி.சம்​பத்தை நெருங்​காத லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் ஒரே ஒரு​முறை மட்​டுமே எம்​எல்​ஏ-​வாக இருந்த சத்யா பன்​னீர்​செல்​வத்தை விடா​மல் துரத்​து​வதன் பின்​னணி என்ன என சத்​யா​வின் ஆதர​வாளர்​கள் இப்​போது சந்​தேகக் கொக்கி போடு​கி​றார்​கள்.

மாவட்​டத் தலைநக​ரான கடலூரைக் காட்​டிலும், பண்​ருட்​டி​யில் இபிஎஸ்ஸை அசர​வைக்​கும் அளவுக்கு சத்யா பன்​னீர்​செல்​வம் கூட்​டத்​தைக் கூட்​டிய​தில் சம்​பத் தரப்பு ரொம்​பவே அப்​செட் ஆனதாகச் சொல்​லும் சத்​யா​வின் ஆதர​வாளர்​கள், “பண்​ருட்டி தொகு​தி​யைச் சேர்ந்​தவர் தான் என்​றாலும் சம்​பத்​தால் இங்கு சத்​யாவை மீறி அரசி​யல் செய்​ய​முடிய​வில்​லை. தன்னை மீறி மாவட்​டத்​தில் யாரும் வளர்ந்​து​விடக் கூடாது என்​ப​தால் தான் 2021-ல் தேர்​தலில் போட்​டி​யிட முடி​யாத​படிக்கு சத்​யாவை ஓரங்​கட்​டி​னார் சம்​பத். அதே​போல் இப்​போதும் சத்​யா​வின் பேரைக் கெடுக்க சம்​பத் தரப்பு தான் ஏதாவது சதிவலை பின்னி இருக்​குமோ என்று சந்​தேகப்​படுகிறோம்” என்​ற​னர்.

எம்​.சி.சம்​பத்​

இதுகுறித்து சத்யா பன்​னீர்​செல்​வத்​திடம் கேட்​டதற்​கு, “அதி​காலை 6 மணிக்​கெல்​லாம் எங்​கள் வீட்​டுக்கு வந்த லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர், குழந்​தைகள் தூங்​கிக் கொண்​டிருந்​ததை​யும் பொருட்​படுத்​தாமல் சோதனை​யில் ஈடு​பட்​டனர். அது என்னை ரொம்​பவே பாதித்​த​தால் தான் மயக்​க​மாகி​விட்​டேன். கடந்த ஆண்டு நெய்​வேலி​யில் அம்மா சிலை திறப்பு விழாவுக்கு அண்​ணன் எடப்​பாடி​யார் வந்த போது பிரம்​மாண்ட வரவேற்பு கொடுத்து உற்​சாகப்​படுத்​தினோம். அப்​போது அவரும் எங்​களைப் பாராட்​டி​னார். அதற்​கடுத்த இரண்டே நாளில் இப்​படித்​தான் எங்​கள் வீட்​டுக் கதவை லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் வந்து தட்​டி​னார்​கள்.

இப்​போது தமி​ழ​கத்தை மீட்​கும் பயணத்​தில் பண்​ருட்​டிக்கு வந்த அண்​ணன் எடப்​பாடி​யாருக்கு அதே​போல் வரவேற்பு அளித்​தோம். நாங்​கள் யாரை​யும் பணம் கொடுத்து அழைத்து வரவில்​லை. அது இயல்​பாகக் கூடிய கூட்​டம். இது ஆளும் கட்​சி​யினரின் கண்ணை உறுத்​தி​ய​தால் எங்​கள் வீட்​டுக்கு மீண்​டும் லஞ்ச ஒழிப்​புத் துறையை அனுப்பி இருக்​கி​றார்​கள். இதற்கு பின்​னணி​யில் யார் இருக்​கி​றார்​கள் என்​றெல்​லாம் எனக்​குத் தெரி​யாது. அதை மக்​களும் எங்​கள் கட்​சி​யினரும் அறி​வார்​கள். இதற்கு மேல் நான் கூறு​வதற்கு ஏது​மில்​லை” என்​றார்.

எம்​.சி.சம்​பத்​திடம் இதுகுறித்து கேட்​டதற்​கு, “ரெய்​டுக்​கும் எனக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்​லை. ரெய்டு குறித்​தான தகவல்​களை​யும் அதற்​கான காரணத்​தை​யும் பொதுச்​செய​லா​ள​ருக்கு தெளிவுபடுத்தி இருக்​கிறோம்” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x