Last Updated : 25 Jul, 2025 07:15 PM

15  

Published : 25 Jul 2025 07:15 PM
Last Updated : 25 Jul 2025 07:15 PM

SIR விவகாரம் | “நெருப்புடன் விளையாடாதீர்கள்” - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: “சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) என்பது தேர்தல் முடிவுகளைத் திட்டமிட்டபடி வடிவமைக்கும் தில்லுமுல்லு நடவடிக்கை” என்று விமர்சித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், “நெருப்புடன் விளையாடாதீர்கள்” என்று எச்சரித்துள்ளார்.

இது குறித்து 'QUIT SIR' என்ற புகைப்படத்துடன் அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) என்பது சத்தமே இல்லாமல் பின்தங்கிய மற்றும் தங்களுக்கு எதிரான பிரிவினரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் செயலாகும். இது சீர்திருத்தம் அல்ல; தேர்தல் முடிவுகளைத் திட்டமிட்டபடி வடிவமைக்கும் தில்லுமுல்லு நடவடிக்கை.

பிஹார் மாநிலத்தில் நடந்ததே அனைத்தையும் வெட்டவெளிச்சம் ஆக்கிவிட்டது. முன்பு தங்களுக்கு வாக்களித்த அதே மக்களே கூட இம்முறை நம்மை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்பதை டெல்லி அணி நன்கு உணர்ந்துள்ளது. அதனால்தான், அவர்கள் வாக்களிக்கவே கூடாது எனத் தடுக்கப் பார்க்கிறது. எங்களைத் தோற்கடிக்க முடியாது என்ற சூழல் எழுந்தால் எங்களை வாக்காளர் பட்டியலில் இருந்தே நீக்கப் பார்க்கிறீரகள். நெருப்புடன் விளையாடாதீர்கள். மக்களாட்சிக்கு எந்த வடிவில் அச்சுறுத்தல் நேர்ந்தாலும் அதனை உறுதியாக நின்று எதிர்ப்போம்.

முழு ஆற்றலுடன் தமிழ்நாடு தனது குரலை உரக்க எழுப்பும். இந்த அநீதிக்கு எதிராக ஜனநாயகரீதியான அத்தனை ஆயுதங்களையும் நாங்கள் அறவழியில் பயன்படுத்துவோம். அரசியலமைப்புச் சட்டத்தின்பால் நம்பிக்கை கொண்டுள்ள குடிமக்கள் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்: S.I.R. என்பது ஒரு மாநிலத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல, நமது குடியரசின் அடித்தளம் தொடர்பானது. மக்களாட்சி மக்களுக்கே உரியது. அதனை எவரும் களவாட அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்: இதனிடையே, தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இதுகுறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஜன.1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இந்த ஆண்டும் வழக்கம்போல சுருக்க முறை திருத்தமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை மேற்கொள்ள முன்னேற்பாடுகளை தொடங்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகவும் அறிகிறோம்.

ஏற்கெனவே பிஹாரில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. மேலும் வாக்காளர்கள் தங்களது இந்திய குடியுரிமைக்கான சான்றிதழ்களை சமர்ப்பித்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் இணைக்கப்படும் என்று கூறி, தங்களது பெயர்களை நீக்கி விடுவார்களோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

அவசரகதியில் பிஹாரில் நடைபெற்று வருவதுபோல சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்றால் பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து விடுபட்டு போய்விடும் ஆபத்து உள்ளது. எனவே, இத்தகைய சூழலில் தேர்தல் ஆணையம், சட்டத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுடைய கூட்டத்தைக் கூட்டி மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகளை பெற்று, அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை சரி செய்யும் பணியை நடத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x