Published : 25 Jul 2025 02:51 PM
Last Updated : 25 Jul 2025 02:51 PM

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் உறுதி

ராமநாதபுரம்: “மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தால் தவிர, வேறு எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம்” என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியதாவது: நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த 21 ஆம் தேதி முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியோ இந்த தருணத்தில் வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

மதுரை ஆதினம் சில மாதங்களுக்கு முன்பாக அவரை கொல்வதற்காக ஒருவர் காரை ஓட்டி வந்ததாக உள்நோக்கத்துடன் ஒரு பேட்டியை கொடுத்திருந்தார். அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் மதுரை ஆதினம் போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை காவேரி, வைகை, குண்டாறு, வைப்பாறு திட்டம் முக்கியமான திட்டம் ஆகும். இந்த திட்டத்துக்கு தமிழக அரசு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து யாரும் வரவில்லை என்பதால் ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார். பாஜகவுடன் அதிமுக அணி சேர்ந்திருக்கும் வரையிலும் அவர்களுடன் யாரும் கூட்டணி வைக்க வருவதற்கு தயாராக இல்லை.

பாஜக கட்சியின் உட்கட்சி பூசல் காரணமாக தான் துணை ஜனாதிபதி பதவி விலகியிருப்பதாக தெரிகிறது. மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தால் தவிர, வேறு எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம், என தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் காசிநாததுரை, கலையரசன், சிவாஜி, ராஜ்குமார், மயில்வாகனன், கருணாகரன், கண்ணகி, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x