Last Updated : 25 Jul, 2025 01:54 PM

12  

Published : 25 Jul 2025 01:54 PM
Last Updated : 25 Jul 2025 01:54 PM

திமுகவுக்கு எதிராக ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற பெயரில் அதிமுக புதிய பிரச்சாரம் தொடக்கம்

சென்னை: திமுக ஆட்சியின் ‘உருட்டுகளும், திருட்டுகளும்’ என்ற பெயரில் புதிய பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் நேற்று (ஜூலை 24) பிரச்சாரம் மேற்கொண்டார்.

புதுக்கோட்டை, விராலிமலை மற்றும் திருமயம் ஆகிய தொகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி, புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி ஓய்வு எடுத்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, 'உருட்டுகளும், திருட்டுகளும்' என்ற பெயரில் புதிய பிரச்சாரத்தை இன்று தொடங்கி வைத்தார்.

திமுக ஆட்சியில், நீட் தேர்வு விலக்கு, மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, ரூ.100 காஸ் மானியம், சொத்து வரி உயர்த்தப்படாது, மின் கட்டணத்தை மாதந்தோறும் செலுத்தும் திட்டம், 5.5 லட்சம் வேலை வாய்ப்புகள், 35 வயதுக்கும் மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு அரசு வேலை, படிப்படியாக மது விலக்கு அமல்படுத்துதல், மாணவர்களுக்கு 4 ஜி, 5 ஜி இணைய வசதி மற்றும் 10 ஜிபி டேட்டாவுடன் கூடிய டேப்லட் ஆகிய 10 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை 'துரோக மாடல் உருட்டுகள்' என்ற பெயரில் பட்டியலிட்டு, கேள்விக்கு ஒன்று வீதம் 10 கேள்விக்கும் எத்தனை மதிப்பெண் கொடுக்கலாம் என குறிப்பிட்டு துண்டறிக்கை அச்சிட்டு, பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்பட உள்ளனர்.

மதிப்பெண் அளிப்பவரின் செல்போன் எண்ணுடன் முகவரியையும் பெறுவது இப்பிரச்சாரத்தின் நோக்கமாகும். மேலும், வாக்குறுதிகளை சக்கரமாக வைத்து சுழற்றச் செய்தும், ஸ்கிராட்ச் கார்டு வடிவிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும், தமிழகத்தில் பாலியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தனித்தனி வீடியோ திரையிடபட்டது. இவற்றை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாணவர்கள், பொதுமக்கள், வணிகர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சிப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி, நேற்று புதுக்கோட்டை மாவட்டம் வரை சுமார் 46 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 15 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன்.

பயணத்தின்போது மக்கள் அளித்த வரவேற்பு, அவர்களிடத்தில் நான் கண்ட மகிழ்ச்சியும், ஆரவாரமும் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.

பிரதமரின் தமிழகப் பயணம் பற்றி முழுமையானத் தகவல் இன்னும் வெளியாகவில்லை. அதனால் அவரை சந்திப்பதும் இதுவரை உறுதியாகவில்லை.

நாங்கள் அமித் ஷாவை சந்தித்ததில் தவறு என்ன இருக்கிறது. அவர் நாட்டின் உள்துறை அமைச்சர். அவரை சந்திப்பதில் என்ன தவறு கண்டார்கள்?. அப்படியென்றால், முதல்வரும், அவரது மகனும் யார் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்?

மக்களின் பிரச்சினைகள் தெரியாத அரசாங்கமாக தான் திமுக அரசாங்கம் உள்ளது. திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது. அப்படியான, நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழிவாங்குவது நல்ல அரசுக்கு அழகல்ல. ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ பிரச்சாரம் மூலம், திமுக செயல்படுத்தாத அறிவிப்புகள் குறித்து மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்படும்.

அதிமுக கூட்டணிக்கு பெரிய கட்சிகள் எப்போது வரவேண்டுமோ அப்போது வரும். கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x