Published : 25 Jul 2025 05:58 AM
Last Updated : 25 Jul 2025 05:58 AM
சென்னை: மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 12 பெட்டிகளை கொண்ட மெமு ரயில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்தடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு பயணிகள் சென்று திரும்ப வசதியாக, மெமு (மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) ரயில்கள் பயனுள்ளதாக இருக்கின்றன.
இந்த ரயில்கள் சென்னை ரயில்வே கோட்டத்தில் காட்பாடி - அரக்கோணம், சென்னை கடற்கரை - மேல்மருவத்தூர், திருத்தணி - சென்னை சென்ட்ரல், சென்னை - திருப்பதி, நெல்லூர் உட்பட 15-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அனைத்தும் 8 அல்லது 9 பெட்டிகளாக மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் இடவசதி குறைவாக இருக்கும்.
இதன் காரணமாக, இந்த ரயில்கள் காலை, மாலை வேளைகளில் நெரிசல் மிகுந்த (பீக் அவர்ஸில்) நேரங்களில் இயக்கப்படும் போது, கூட்டம் நிரம்பி வழிந்து பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, இந்த ரயில்களில் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக இயக்க வேண்டும் என்றும், மெமு ரயில்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 12 பெட்டிகள் கொண்ட மெமு ரயில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இந்த மேம்படுத்தப்பட்ட மெமு ரயில், பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மின்சார மல்டிபிள் யூனிட் ரயில் ஆகும். நேரடி மின்னோட்டத்தில் இயங்கும் மெமு ரயில்களை விட இந்த ரயில்கள்பல நன்மைகளை வழங்குகின்றன. பழைய மெமு ரயில்களை விட இந்த ரயில்களில் இட வசதி அதிகமாக உள்ளதால், 30 சதவீதம் பயணிகள் வரை கூடுதலாக பயணிக்க முடியும். பிரேக்கிங் முறை அதிக திறன் கொண்டது.
இந்த ரயிலில் குஷன் இருக்கைகள், கழிவறை வசதி, மேம்படுத்தப்பட்ட கதவுகள், கண்காணிப்பு கேமிராக்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அவசர காலத்தில் பயணிகள், ஓட்டுநருடன் நேரடியாக பேசும் வசதி, மொபைல் சார்ஜிங் வசதி உள்ளிட்ட வசதிகளும் இடம் பெற்று இருக்கின்றன. இந்த ரயிலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, எதிர்காலத்தில் கூடுதல் மெமு ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT