Published : 25 Jul 2025 09:44 AM
Last Updated : 25 Jul 2025 09:44 AM

காங்கயம் காளை சிலைக்கு கட்டை போடுவது யார்? - திகுதிகுக்கும் திருப்பூர் அரசியல்!

2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் கிட்டத்தட்ட நிறைவேற்றிவிட்டதாக திமுக அரசு முரசறைகிறது. ஆனால், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்தத் தொகுதியான காங்கயத்தில் காங்கயம் காளைக்கு சிலை அமைக்கப்படும் என திமுக தலைவராக ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 2020 நவம்​பர் 6-ல் திருப்​பூர் வந்த அப்​போதைய முதல்​வர் எடப்​பாடி பழனி​சாமி, “காங்​க​யம் காளைக்கு காங்​க​யம் நகரின் மையப்​பகு​தி​யில் சிலை அமைக்​கப்​படும்” என அறி​வித்​தார். அது அறி​விப்​போடு நின்று போன நிலை​யில், தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்கு வந்த ஸ்டா​லினும் அதே உத்தரவாதத்தை அளித்​துச் சென்​றார். ஆனால், ஆண்​டு​கள் 4 ஆன நிலை​யிலும் இன்​னும் காளைக்கு சிலை வந்​த​பாடில்​லை. காளைக்கு சிலை வைத்து பெயரெடுப்​பது யார் என்​ப​தில் திமுக-வுக்​குள்​ளேயே இரண்டு கோஷ்டிகள் தெற்கு வடக்​காக இழுப்​பது தான் பிரச்​சினைக்கு காரணம் என்கிறார்​கள்.

காங்​க​யம் காளைக்கு சிலை அமைக்க அனு​ம​திக்​காததைக் கண்​டித்து முன்​னாள் காங்​க​யம் ஒன்​றியக் குழு தலை​வர் மகேஷ்கு​மார் சில மாதங்​களுக்கு முன்பு உண்​ணா​விரதப் போராட்​டம் அறி​வித்​தார். அதை ஆதரிக்​கும் வித​மாக, வெளி​நாடு வாழ் தமி​ழர் நல வாரி​யத்​தின் தலை​வ​ரும், திமுக சுற்​றுச்​சூழல் அணி​யின் மாநிலச் செய​லா​ள​ரு​மான கார்த்​தி​கேய சிவசே​னாபதி முதல்​வ​ருக்​கும், துணை முதல்​வ​ருக்​கும் கடிதம் எழு​தி​னார். அப்​படி​யும் வேலை நடக்​க​வில்​லை.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய மகேஷ்கு​மார், “காங்​க​யம் காளைக்கு ஒன்​றிய அலு​வலக வளாகத்​தில் சிலை அமைக்க 2022 மார்ச் மாதமே ஒன்​றியக்​குழு கூட்​டத்​தில் தீர்​மானம் நிறை​வேற்றி ஆட்​சி​யருக்கு அனுப்பி வைத்​தோம். ஆனால், குஜ​ராத் உயர்​நீ​தி​மன்ற தீர்ப்பை மேற்​கோள் காட்​டி, சிலை அமைக்க அனு​மதி மறுத்​து​விட்​டார் ஆட்​சி​யர். ஒன்​றிய அலு​வல​கத்​தில் இல்​லாமல் வேறு பொது இடத்​தில் சிலையை அமைக்​கலாம் என சிலர் யோசனை தெரி​வித்​தனர்.

இதையடுத்​து, கரூர் - தாராபுரம் சாலை சந்​திப்பு அருகே சிலையை அமைக்க அனைத்​துத் துறை​யினரிட​மும் தடை​யில்லா சான்று பெற்​றோம். ஆனாலும், ஆட்​சி​யரிட​மிருந்து எங்​களுக்கு ஒப்​புதல் கிடைக்​க​வில்​லை. அதேசம​யம், எங்​களுக்கு அனு​மதி கொடுக்க யோசித்​தவர்​கள், காங்​க​யம் காளைக்கு சம்​பந்​தமே இல்​லாத உடுமலைப்​பேட்டை பேருந்து நிலை​யம் அருகே சிலை அமைக்க அனு​மதி கொடுத்து அங்கு சிலை​யும் நிறு​வப்​பட்​டுள்​ளது. காங்​க​யம் காளைக்கு சிலை வைத்​தால் யாருக்கு பேர் கிடைக்​கும் என்ற போட்டா போட்​டி​யில் தான் சிலை​வைக்​கும் பணி தாமத​மாகி வரு​கிறது” என்​றார்.

காங்​க​யம் திமுக-​வினரோ, ”காங்​க​யத்​தில் அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதனும், கார்த்​தி​கேய சிவசே​னாப​தி​யும் இரண்டு அணி​களாக அரசி​யல் செய்து வரு​கி​றார்​கள். இம்​முறை காங்​க​யத்​தில் போட்​டி​யிட சிவசே​னாப​தி​யும் ஆர்​வ​மாய் இருக்​கி​றார். இதனால் காளைக்கு சிலை வைத்து யார் அதன் பலனை பெறு​வது என்​ப​தில் இரு தரப்​புக்​கும் இடை​யில் போட்டி இருப்​பது உண்​மை​தான். அதனால் இரு​வ​ருமே அமைதி காக்​கி​றார்​கள்.

கோவை பந்​தய​சாலை, அவி​நாசி, திருச்​சி, உடுமலை உள்​ளிட்ட இடங்​களில் காங்​க​யம் காளைக்கு சிலை வைத்​திருக்​கி​றார்​கள். ஆனால், சம்​பந்​தப்​பட்ட காங்​க​யத்​தில் சிலை வைக்க முடி​யாமல் கோஷ்டி அரசி​யல் முட்​டுக்​கட்டை போடு​கிறது. முக்​கிய​மாக, கார்த்​தி​கேய சிவசே​னாப​திக்கு இதில் பெயர் கிடைத்​து​விடக்​கூ​டாது என்​ப​தில் சிலர் தீவிர​மாக இருக்​கி​றார்​கள். இதற்கு நடு​வில் அமைச்​சர் சாமி​நாதன் தரப்​பில், ‘காங்​க​யம் காளை சிலை அமைப்பு சங்​கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்​படுத்​தி​விட்​ட​தால் இந்த விஷ​யத்​தி​லிருந்து பலரும் தள்ளி நிற்​கி​றார்​கள்” என்​கி​றார்​கள்.

சிபிஎம் கட்​சி​யின் காங்​க​யம் தாலுகா குழு உறுப்​பினர் இரா.செல்​வ​ராஜ் நம்​மிடம் பேசுகை​யில், “நாங்​கள் எங்​கள் கட்​சி​யின் கிளை மாநாட்​டில் இது தொடர்​பாக 2 முறை தீர்​மானம் நிறை​வேற்​றினோம். அமைச்​சர் கே.என். நேரு​வுக்​கும் கடிதம் அனுப்​பினோம். காங்​க​யத்​தில் காளை சிலை வைத்​தால், அதற்​காக போராட்​டங்​களை நடத்​தி​ய​வர்​களுக்​கும், திமுக-​வில் ஒரு தரப்​புக்​கும் நல்ல பெயர் கிடைத்​து​விடும் என்​ப​தாலேயே தாமதம் செய்​வ​தாக அறிகி​றோம். இப்​போது சிலை எல்​லாம் தயா​ராகி வந்​து​விட்ட நிலை​யில் இதில் அரசி​யல் நடத்​திக் கொண்​டிருக்​காமல் விரை​வில் சிலையை நிறுவ வேண்​டும் என்​பதே எங்​கள் விருப்​பம்” என்​றார்.

காங்​க​யம் காளைக்கு சிலை வைப்​ப​தில் என்ன சிக்​கல் என கார்த்​தி​கேய சிவசே​னாப​தி​யிடம் கேட்​டதற்​கு, “காங்​க​யத்​தில் காளைக்கு சிலை வைக்க வேண்​டும் என்​பது தான் எங்​கள் கோரிக்​கை. அதற்​காக முதல்​வர், துணை முதல்​வ​ருக்கு கடிதம் எழு​தி​யதை நான் அரசி​ய​லாக பார்க்​க​வில்​லை” என்​றார். இது விஷய​மாக அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதனிடம் கேட்​டதற்​கு, "காங்​க​யம் காளை சிலை​யானது காங்​க​யம் ஒன்​றிய அலு​வலக வளாகத்​துக்​குள் சாலை​யில் செல்​வோர் பார்​வை​யில் படும்​படி அமைக்​கப்​படு​கிறது.

இதற்​காக வேறு யாரும் எந்த முன்​னெடுப்​பும் எடுக்​க​வில்​லை. அரசே அமைப்​ப​தால் நிதி ஆதா​ரத்தை பொறுத்து கொஞ்​சம் தாமத​மானது. சிலை வைக்​கப் போவதை தெரிந்​து​கொண்டு யார் வேண்​டு​மா​னாலும் போராட்​டம் நடத்​தலாம். ஆனால், மக்​களின் அடிப்​படை பிரச்​சினை​களான குடிநீர், பட்டா உள்​ளிட்​ட​வற்​றுக்கு தீர்வு காண வேண்​டியது முதல் வேலை. அதை முடித்​து​விட்​டுத் தான் காட்​சிப் பொருளாக வைக்​கப்​படும் காளை சிலைக்கு பணி​கள் துவங்​கப்​பட்​டுள்​ளன. பணி​களை விரை​வாக முடித்து காங்​க​யம் காளை சிலை சீக்​கிரமே திறக்​கப்​படும்" என்​றார். காளைக்கு சிலை வைப்​ப​தில் இனி​யும் கலக அரசி​யல் செய்​யாமல் ஆகவேண்​டிய பணி​களை கவனித்​தால் நல்​லது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x