Published : 24 Jul 2025 09:29 AM
Last Updated : 24 Jul 2025 09:29 AM
காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்களை தலைவர்களாக பார்க்கவோ, ஏற்கவோ அங்கிருப்பவர்களுக்கு இஷ்டமில்லை. அதனால் அங்கே பெண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன” என்று குறை சொல்லி காங்கிரஸைவிட்டு விலகிய முன்னாள் எம்எல்ஏ-வான விஜயதரணி, 2024 பிப்ரவரியில் பாஜக-வில் இணைந்தார். ஆனால், கட்சியில் சேர்ந்து சுமார் ஒன்றரை வருடங்கள் ஆகும் நிலையிலும் பாஜக அவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கவில்லை. இதையடுத்து, அவர் தவெக-வில் இணையப் போவதாக இப்போது சிலர் செய்திகளை சுத்தவிட்டிருக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய 3 தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வென்றவர் விஜயதரணி. அதனால், தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்ற தனக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார் விஜயதரணி. ஆனால், அது கைகூடாமல் போனது.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகைக்கு காங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்கப்பட்டதால், அவர் வகித்த சட்டமன்றக் குழு தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்தார் விஜயதரணி. அதையும் சிலர் லாபி செய்து அவரை விட ஜூனியரான கிள்ளியூர் எம்எல்ஏ-வான ராஜேஷ் குமாருக்கு கொடுக்க வைத்தனர். இதனால் கட்சித் தலைமை மீது அதிருப்தி கொண்ட விஜயதரணி, அடுத்த ஒரே வாரத்தில் டெல்லியில் நட்டாவை சந்தித்து தன்னை பாஜக-வில் இணைத்துக் கொண்டார்.
அப்போதே, “வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமை வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன்” என தனது விருப்பத்தையும் எதிர்பார்ப்பையும் அவர் சொல்லி இருந்தார். ஆனால், அவரை கணக்கில் கொள்ளாமல் பழையபடி பொன்.ராதாகிருஷ்ணனுக்கே கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தது பாஜக தலைமை.
இதனால் ஏமாற்றமடைந்த விஜயதரணி, “மக்களவைத் தேர்தலில் வாய்ப்பளிப்பதாகச் சொல்லித்தான் என்னை பாஜக-வில் சேர்த்தார்கள். அதனால் தான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தேன். ஆனால், தேர்தலில் எனக்கு வாய்ப்பளிக்காததோடு மட்டுமல்லாது ஆறு மாதங்களாகியும் எனக்கு எந்தப் பொறுப்பும் வழங்காமல் இருக்கிறார்கள். இது எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது” என சுமார் பத்து மாதங்களுக்கு முன்பே பொதுவெளியில் புலம்ப ஆரம்பித்தார்.
இதைப் பார்த்துவிட்டு குமரி மாவட்ட காங்கிரஸில் இருக்கும் அவரது நலன் விரும்பிகள் தொடர்ச்சியாக சமூகவலைதளங்களில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், விஜயதரணி நடிகர் விஜய்யின் தவெக-வில் இணையப் போகிறார். அங்கே அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப் போகிறார்கள் என சிலர் செய்திகளை சுற்றவிட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், விஜயதரணிக்கு திமுக-வும் அதிமுக-வும் ஆஃபர் வைத்திருக்கிறது என்றும் கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து விஜயதரணியிடமே விசாரித்தோம். “பாஜக-வில் முக்கிய பதவி வழங்குவார்கள் என நான் எதிர்பார்த்திருந்தது ஏமாற்றம் தான். இருந்தபோதும், பாஜக ஆளும் தேசிய கட்சி என்பதால் காலதாமதம் ஆனாலும் முக்கிய தருணத்தில் எனக்கு பதவி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சட்டமன்றத் தேர்தல் வருவதால் தேர்தல் பிரச்சாரத்திலும் வாக்குச் சேகரிப்பிலும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
இதற்கிடையில், நான் விஜய் கட்சியில் இணைவதாகவும், திமுக, அதிமுக எனக்கு தூது விடுவதாகவும் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏ-வாக இருந்திருக்கிறேன் என்பதால் எதிர்பார்ப்பில் இருக்கும் சிலர் இப்படியான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
பாஜக-வில் இணைந்த நான் மட்டுமல்ல... நடிகர்கள் சரத்குமார், குஷ்பு போன்றவர்களும் பாஜக-வில் எந்தப் பதவியும் இல்லாமல் தான் இருக்கிறார்கள். பாஜக-வை பொறுத்தவரை தகுந்த பதவிகளை தாமதமாகவே வழங்குவார்கள். எனக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முக்கிய பதவியை பாஜக வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று சொன்னார் அவர்.
விஜயதரணி காங்கிரஸில் மன வருத்தத்துடன் இருந்த போதும் இப்படித்தான் அவர் பாஜக அல்லது அதிமுக-வில் இணையப் போவதாக செய்திகள் கசிந்தன. அப்போது விஜயதரணி டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில், “அவர் வழக்கு ஒன்றுக்காக டெல்லியில் இருக்கிறார்” என சமாதானம் சொன்னார் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. ஆனால் கடைசியில், விஜயதரணி பாஜக-வில் ஐக்கியமானார். அவர் விஜய் கட்சியில் இணையப் போவதாகச் சொல்பவர்கள் இப்போது இதையும் நினைவூட்டுகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT