Published : 24 Jul 2025 09:16 AM
Last Updated : 24 Jul 2025 09:16 AM
நாமக்கல் மாவட்ட அதிமுக என்றால் அது முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தான். ஒருவகையில், இபிஎஸ்ஸுக்கு சம்பந்தி உறவுமுறைக்காரர் என்பதால் அதிமுக-வில் தனித்த செல்வாக்குடன் இருக்கும் அவருக்கே நாமக்கல்லில் ஒருவர் சவால்விட்டுக் கொண்டிருக்கிறார்.
நாமக்கல் மாவட்டச் செயலாளராக இருக்கும் தங்கமணியின் எண்ணப்படி தான் கட்சிக்குள் எதுவுமே நடக்கும். இந்த நிலையில், முன்னாள் எம்எல்ஏ-வும் நாமக்கல் நகரச் செயலாளருமான கே.பி.பி.பாஸ்கர் இப்போது தங்கமணிக்கு எதிராக கொடிபிடித்து நிற்கிறார். மாவட்டத்தில் தங்கமணியை தாண்டி எதுவும் நடக்காது என்பது தெரிந்தும் பழனிசாமியின் நேரடி தொடர்பில் தனி ரூட்டில் அரசியல் செய்து வருகிறார் பாஸ்கர்.
இதை ஏற்கமுடியாத தங்கமணி தரப்பு, பாஸ்கரை ஓரங்கட்டுவதற்கான வேலைகளைச் செய்து வருகிறது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத பாஸ்கர், கடந்த 5-ம் தேதி தனது ஆதரவாளர்கள் சகிதம் சேலத்துக்கே சென்று பழனிசாமியை நேரில் சந்தித்து, தங்கமணி மீதான தனது சங்கடங்களை பட்டியல் போட்டுவிட்டு வந்திருக்கிறார்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய நாமக்கல் அதிமுக-வினர் சிலர், “மாவட்ட அதிமுக-வில் தங்கமணி வைத்தது தான் சட்டம் என்றாலும் நாமக்கல் நகர அதிமுக-வில் பாஸ்கர் சொல்வது தான் நடக்கும். இதைத்தான் தங்கமணி தரப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாமக்கல் மாவட்ட அதிமுக-வை இரண்டாகப் பிரித்து தன்னையும் மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என பாஸ்கர் வலியுறுத்தி வருகிறார். தங்கமணி இதற்கு குறுக்கே நிற்கிறார்.
இதனிடையே, 2026-ல் மீண்டும் நாமக்கல்லில் போட்டியிடுவதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார் பாஸ்கர். ஆனால், இவருக்குப் போட்டியாக மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளரான தொழிலதிபர் ஸ்ரீதேவி மோகன் என்ற மோகனை தயார்படுத்தி வருகிறார் தங்கமணி. இது தெரிந்ததில் இருந்தே தங்கமணி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை பாஸ்கரும் அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்து வருகிறார்கள்.
அண்மையில் நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், இபிஎஸ் மீண்டும் முதல்வராக வேண்டும் என மாவட்ட மகளிரணி நடத்திய திருவிளக்கு பூஜையில் கூட பாஸ்கர் தரப்பு லந்துகொள்ளவில்லை. அதற்கு, தங்களுக்கு அழைப்பு வராததால் கலந்துகொள்ளவில்லை என பாஸ்கர் தரப்பு காரணம் சொன்னது. இதையடுத்துத்தான் பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து தங்கமணிக்கு எதிராக பிராது சொல்லிவிட்டு வந்திருக்கிறது பாஸ்கர் தரப்பு” என்றார்கள்.
தங்கமணி ஆதரவாளர்களோ, “தொடர்ந்து பாஸ்கரே தான் எம்எல்ஏ ஆகவேண்டுமா... மற்றவர்களுக்கும் எம்எல்ஏ ஆகவேண்டும் என்ற ஆசை இருக்காதா? இந்தமுறை மாவட்டச் செயலாளர் யாரை பரிந்துரைக்கிறாரோ அவருக்குத்தான் நாமக்கல் சீட். நாமக்கல், ஈரோடு, திருச்சி ஆகிய 3 மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக இருக்கிறார் தங்கமணி. பாஸ்கர் நகரச் செயலாளர் மட்டும் தான். தங்கமணிக்கு எதிராக புகார் சொல்ல படையை திரட்டிக் கொண்டு போனவர் பொதுச்செயலாளரிடம் வாங்கி கட்டிக் கொண்டு வந்தது தான் மிச்சம்” என்கிறார்கள்.
இதுகுறித்து பாஸ்கரிடம் கேட்டதற்கு, “கடந்த இரண்டு வருடத்தில் எனது தாயாரும் மனைவியும் அடுத்தடுத்து இறந்து போனதால் என்னால் கட்சி நிகழ்ச்சிகளில் சகஜமாக கலந்து கொள்ள முடியவில்லை. நாமக்கல்லில் தலைமை யாருக்கு சீட் கொடுத்தாலும் வேலை செய்வேன். ஆனால், கட்சிக்காக எந்த வேலையும் செய்யாத ஒருவரை (தேவி மோகன்) முன்னிலைப்படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
மாவட்டத்தைப் பிரித்து என்னை மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. எனக்கு இந்தப் பதவியே போதும். தங்கமணியே மாவட்டச் செயலாளராக இருக்கட்டும். ஆனால், சூழ்நிலை காரணமாக கட்சி நிகழ்ச்சிகளுக்கு வராததை வைத்து இட்டுக்கட்டி பேசுவதை ஏற்கமுடியவில்லை.
தலைமையிடம் இருந்து அழைப்பு வந்ததால் பொதுச்செயலாளரை நேரில் சந்தித்தேன். அப்போது பொதுச்செயலாளர், தங்கமணி உள்பட நாங்கள் மூவர் மட்டுமே அங்கு இருந்தோம். ‘இனி அனுசரித்து கட்சிப் பணிகளைப் பாருங்கள்’ என பொதுச்செயலாளர் அறிவுறுத்தினார். அதை ஏற்றுக்கொண்டு திரும்பினேன். அழைத்தால் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்பது தான் எனது நோக்கம்” என்றார்.
நாமக்கல் மாவட்ட அதிமுக-வில் அவுட் ஆஃப் கன்ட்ரோலில் இருக்கும் பாஸ்கரை தங்கமணி எப்படி சமாளிக்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT