Published : 24 Jul 2025 06:01 AM
Last Updated : 24 Jul 2025 06:01 AM
திருச்சி: திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர்கள்போல ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். கோட்டப் பொறுப்பாளர் கருப்பு முருகானந்தம், மாநகர் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் விரோத சக்தியான திமுக தொடர்ந்து ஆட்சியில் இருக்கக் கூடாது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது.
அரசு செலவில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி மூலம் திமுகவை வளர்க்கிறார்கள். இதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளனர். அவர்கள் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்கள்போல செயல்படுகிறார்கள். ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்பது ஏமாற்று வேலை. கூட்டணி குறித்து எங்களிடம் கேள்வி கேட்கும் ஊடகத்தினர் முதல்வர் ஸ்டாலினிடம் கேட்பதில்லை.
‘குர்-ஆன் மீது சத்தியமாக பாஜகவுடன் கூட்டணி கிடையாது’ என ஆதவ் அர்ஜுனா கூறி உள்ளார். குர்-ஆர்ன், பகவத் கீதை, பைபிள் ஆகியவற்றை அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டணி ஆட்சி? - ‘தமிழகத்தில் தேசிய ஜனநாய கக் கூட்டணி ஆட்சிதான் அமையும் என டிடிவி தினகரன் கூறியுள்ளாரே?’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “அது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கும். எங்கள் கருத்துக்கு மாறாக இருந்தால் பதில் சொல்லலாம்” என்றார். அதேநேரம், டிடிவி.தினகரனின் கருத்தை நயினார் நாகேந்திரன் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT