Published : 23 Jul 2025 03:24 PM
Last Updated : 23 Jul 2025 03:24 PM
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (23.7.2025) காணொலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகு மீனா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, முதல்வர் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, இதுவரை அம்மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கேட்டறிந்தார்.
அத்துடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மனுக்கள் அளிக்க வருகை தந்த பயனாளிகளிடம் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
“உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த பயனாளிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும், அரசு தலைமைச் செயலாளரிடம் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். முக்கிய கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார். இந்நிகழ்வின்போது, அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT