Last Updated : 23 Jul, 2025 08:43 AM

19  

Published : 23 Jul 2025 08:43 AM
Last Updated : 23 Jul 2025 08:43 AM

“திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன்!” - குஷ்பு ‘சேலஞ்ச்’ நேர்காணல்

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு | படம்: எஸ்.சத்தியசீலன்

தீவிர அரசியலில் ஈடுபட தடையாக இருப்பதாகச் சொல்லி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு அதன் பிறகும் அமைதியாகவே இருக்கிறார். தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வரும் நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்காக அவரிடம் பேசினோம்.

குஷ்பு இப்போது பாஜக-வில் தான் இருக்கிறாரா?

பத்திரிகை, ஊடகங்களில் என் முகம் தெரிந்தால் தான் நான் பாஜக-வில் இருக்கிறேன் என்பது இல்லை. நான் இப்போது பாஜக-வில் என்ன பணி செய்து கொண்டிருக்கிறேன் என்பது தான் முக்கியம். பாஜக-வை மேம்படுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். நான் என்ன வேலை செய்கிறேன் என்பது பாஜக-வில் இருப்பவர்களுக்கு தெரியும்.

தீவிர அரசியலில் ஈடுபட தடையாக இருப்பதாகச் சொல்லி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை துறந்தீர்கள். ஆனால், அதன் பிறகும் தீவிர அரசியலில் ஈடுபட்டதாக தெரியவில்லையே?

எனக்கு பாஜக-வில் கொடுத்த வேலையை செய்து கொண்டு தான் இருக்கிறேன். ஊடகங்களில் ஒரு போட்டோ, பேட்டி கொடுத்துத்தான், நான் அரசியலில் இருக்கிறேன், மக்களுக்காக வேலை செய்கிறேன் என்பதை தெரியவைக்க வேண்டிய அவசியம் கிடையாது.

திமுக, காங்கிரஸ் என பரபரப்பு அரசியல்வாதியாக இருந்த குஷ்புவை பாஜக கறிவேப்பிலை கணக்காய் பயன்படுத்திவிட்டதோ?

நான் எதற்காக திமுக-வில் இருந்து வெளியேறினேன் என்பது கருணாநிதிக்கு தெரியும். அவர் மீதான மரியாதை காரணமாக அதை பற்றி நான் வெளியில் சொல்லவும் மாட்டேன். கருணாநிதி தலைமையில் 6 ஆண்டுகள் நான் திமுக-வில் இருந்த போது, திமுக-வில் அனைவருக்குமான மரியாதை கிடைத்தது. ஆனால், தற்போது ஒரு வித்தியாசமான திமுக-வை பார்க்கிறேன். இது மக்களுக்காக வேலை செய்யும் திமுக அல்ல. தனது குடும்பத்துக்காகவும், நாற்காலியை தக்க வைத்துக்கொள்ளவும் வேலை செய்கிற திமுக-வாக மாறியிருக்கிறது.

என்னை கறிவேப்பிலை போல ஒதுக்கி வைத்தது காங்கிரஸ் தான். கடின உழைப்புக்கான எந்த அங்கீகாரமும் எனக்கு கிடைக்கவில்லை. 5 ஆண்டுகள் காங்கிரஸில் இருந்து நான் நேரத்தை வீணடித்துவிட்டேன். அங்கும் குடும்பத்துக்காக மட்டுமே உழைக்கிறார்கள். குடும்பத்திற்காக ‘ஆமாம் சாமி’ போடுவதற்கு நான் அரசியலுக்கு வரவில்லை.

அண்ணாமலை தரப்பினரின் செயல்பாடுகளால் தான் தீவிர அரசியலை குறைத்துக் கொண்டீர்கள் என்கிறார்களே?

அது தவறு. நான் கட்​சி​யில் சேரும் போது எல்​.​முரு​கன் தலை​வ​ராக இருந்​தார். அவர் தான் என் வீட்​டுக்கு வந்​து, என்​னிடம் பேசி கட்​சிக்கு அழைத்து வந்​தார். நான் பாஜக-​வில் இணைந்​ததும், பிரதமர் மோடி என்னை தேசிய செயற்​குழு உறுப்​பின​ராக்​கி​னார்; தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்பு வழங்​கி​னார். எத்​தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்​கும்?

எனவே, எனக்​கான இடத்தை முடிவு செய்ய வேண்​டியது அண்​ணா​மலை இல்​லை. அவரும் பாஜக-​வின் ஒரு அங்​கம் மட்​டும் தான். என்​னைப்​போல அண்​ணா​மலை​யும் ஒரு நிர்​வாகி தான். முடிவு​களை எடுப்​பவர் அவர் கிடை​யாது. முடிவு​களை தேசிய தலை​வர்​கள் தான் எடுப்​பார்​கள். அதனால், அண்​ணா​மலை மீது பழி சுமத்​து​வ​தில் அர்த்​தமே இல்​லை.

தமிழக பாஜக-வில் பெண்களை சுதந்திரமாக அரசியல் செய்ய விடுகிறார்களா?

ஜெயலலிதா இருக்கும் வரை, அதிமுக-வில் அவர் மட்டும் தான் இருந்தார். அதன்பிறகு யார்? கருணாநிதியின் மகள் என்பதால் தான் திமுக-வில் கனிமொழிக்கு எம்பி பதவியெல்லாம் கிடைக்கிறது. எத்தனை பெண்களுக்கு திமுக-வில் பதவி இருக்கிறது? எத்தனை பெண்கள் ஸ்டாலின் உட்காரும் வரிசையில் அமர்கிறார்கள்? ஆனால், திரவுபதி முர்மு, சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாரமன், தமிழிசை, வானதி, ஸ்மிருதி இரானி என பாஜக-வில் பிரதமர் உட்காரும் வரிசையில் அமர எத்தனையோ பெண் தலைவர்கள் இருக்கிறார்கள். பெண்களுக்கு பாஜக-வில் மகுடம் சூட்டப்படுகிறது.

திமுக-வுக்கு எதிராக தினம் ஒரு திகிலைக் கிளப்பி வந்த அண்ணாமலை இப்போது, “நான் யாரிடமும் வேலை செய்யலைங்ணா” என்று ஒதுங்கி ஓடுகிறாரே?

தலைவர்கள் எப்போதும் குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். வெறும் குரல் கொடுப்பது மட்டுமே அரசியல் இல்லை. நயினார் நாகேந்திரன் வந்த பிறகு, தனது பாணியில் அவர் அரசியல் செய்துகொண்டிருக்கிறார். அண்ணாமலை அரசியல் பாணி வேறு. நயினார் நாகேந்திரன் அரசியல் பாணி வேறு.

திமுக-வுக்கும் எங்களுக்கும் தான் நேரடிப் போட்டி என்று சொல்லிக் கொண்டிருந்த தமிழக பாஜக, தற்போது அந்த இடத்தை தவறவிட்டுவிட்டது போல் தெரிகிறதே..?

பாஜக-வில் இப்போது தான் தலைவர் மாற்றப்பட்டிருக்கிறார். எப்போதும், பாஜக-வில் தலைவர்களின் குரல் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என அனைவரும் நினைக்கிறார்கள். அந்த காலத்தில் தண்டோரா போட்டு, மக்கள் கூட்டத்தை கூட்டி கட்சியை வளர்த்தார்கள். ஆனால் இப்போது, சமூக வலைதளங்களில் குரல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என பழகிவிட்டார்கள். நாங்கள் எதையும் தவறவிடவில்லை. இப்போதும் திமுக-வுக்கும், பாஜக கூட்டணிக்கும் தான் போட்டி நடக்கிறது.

கூட்டணிக்கு வரமாட்டோம் என்று சொன்ன அதிமுக-வை பாஜக தலைமை வலுக்கட்டாயமாக கட்டி இழுத்து வந்து கூட்டணிக் கூண்டுக்குள் அடைத்துவிட்டது என்கிறார்களே?

தளபதி படத்தில், “தேவாவுக்கு ஒன்றும் ஆகாது. யார் சொன்னா..? தேவா தான் சொன்னான்,” என்று வரும் வசனம் போல, “யார் வெற்றி பெறுவார்..? திமுக தான். யார் சொன்னா... திமுக தான்” என திமுக-வும், அதன் கூட்டணி கட்சிகளும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காமராஜரை பற்றி பேசிக்கொண்டிருக்கும் காங்கிரஸ், காமராஜருக்கு பிறகு தமிழகத்தில் ஏன் ஆட்சியை பிடிக்க முடியவில்லை? 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக முதுகில் தானே காங்கிரஸ் சவாரி செய்து கொண்டிருக்கிறது.

காமராஜரை பற்றிய திமுக எம்பி திருச்சி சிவாவின் விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

கொஞ்சமாவது சூடு, சொரணை இருந்தால், பெரும் தலைவர் காமராஜரை பற்றி திருச்சி சிவா அவதூறாக பேசியதற்காக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் தனித்து நிற்க வேண்டும். தமிழகத்தில் தனித்து நிற்க ராகுல் காந்திக்கு தைரியம் இருக்கிறதா? திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவதாக ராகுல் காந்தி அறிவித்தால், நான் அரசியலிலிருந்தே விலகிவிடுகிறேன். இதன் மூலம் நான் ராகுல் காந்திக்கு ‘சேலஞ்ச்’ விடுக்கிறேன்.

அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்த பிறகு அந்தக் கூட்டணி மீது திமுக அதிகமாக விமர்சனங்களை முன்வைக்கிறதே?

4 ஆண்டுகால ஆட்சியில் திமுக எதுவும் செய்யவில்லை என அவர்களுக்கு தெளிவாக தெரிகிறது. எனவே, திமுக-வுக்கு எங்கள் கூட்டணியை பார்த்து பதற்றம் ஏற்படத் தொடங்கி விட்டது. மக்களை பற்றி கவலைப்படாமல், குடும்பத்துக்காக உழைக்க தான் திமுக என்ற கட்சியே இருக்கிறது. பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை சரியாக சென்றடையவில்லை என்பதற்காக, மீண்டும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் மூலம் பதிவு செய்வதற்காக அதிகளவில் பெண்கள் வந்தார்கள். ஆனால், இது தங்களுக்காக சேர்ந்த கூட்டம் என திமுக-வினர் பப்ளிசிட்டி செய்து வருகிறார்கள். மோசடி செய்வதும், மக்களை ஏமாற்றுவதும் திமுக-வுக்கு கை வந்த கலை.

தமிழகத்தில் பாஜக நினைக்கும் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியம் ஏற்படும் என நினைக்கிறீர்களா?

கூட்டணி ஆட்சியை பற்றி அமித் ஷாவும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும் தான் முடிவு செய்வார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, நடுவில் நாம் பேசி குழப்பத்தை உருவாக்க வேண்டாம்.

தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சியை ஏற்காமல் அதிமுக முரண்டு பிடித்தால் என்ன செய்யும் பாஜக?

நாங்கள் யாரை நம்பியும் இல்லை. தனித்து செயல்படுவோம். கூட்டணி இருந்தால் எங்கள் இருவரின் எதிரியான திமுக-வை வீழ்த்துவது எளிது. எனினும், கூட்டணி ஆட்சி குறித்து இரு தலைவர்களும் சேர்ந்து முடிவெடுப்பார்கள்.

பெரியார் மண் என்று சொல்லப்படும் தமிழகத்தில் தனித்து ஆட்சியமைக்கும் நிலைக்கு பாஜக-வால் வரமுடியுமா?

பாஜக கட்சி ஆரம்பித்து 2 எம்பி-க்கள் மட்டுமே இருந்தார்கள். முழு மெஜாரிட்டி காங்கிரஸுக்கு இருந்தது. ஆனால், இன்று காங்கிரஸ் இருக்கும் இடமே தெரியவில்லை. அதேபோல, தமிழகத்திலும் நிச்சயம் மாற்றம் வரும். அதிமுக, திமுக மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைக்கிறார்கள். காங்கிரஸால் தனித்து நிற்க முடியவில்லை. ஆனால், பாஜக-வுக்கு தனித்துக் களம் காணும் அளவுக்கு தைரியம் இருக்கிறது. தைரியம் இருக்கும் போது எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.

அதிமுக இம்முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க சாத்தியம் இருக்கிறதா?

அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

தமிழகத்தில் மோடி பிம்பம் எடுபடாமல் இருப்பதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

பாஜக-வின் முகம் பிரதமர் மோடி தான். அவரை முன்னிறுத்தித் தான் மக்களிடம் ஓட்டு கேட்டுச் செல்கிறோம். மக்கள் பாஜக-வுக்கு வாக்களித்து வருகிறார்கள். மக்களின் மனநிலை மாறியிருக்கிறது. தற்போது 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும்.

2029 தேர்தலுக்கும் பாஜக-வுக்கு மோடி என்ற சக்சஸ் முகம் தேவைப்படுமோ..?

ஒவ்வொரு நேரத்திலும் ஒரே தலைவர் இருக்க முடியாது. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

75 வயது ஆகிவிட்டால் ஒதுங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சொல்லி இருப்பது மோடியை குறிப்பிட்டுத்தான் என்கிறார்களே..?

இதற்கு நான் பதில் கொடுக்க முடியாது.

சிறுபான்மையினர் வாக்குகளை பிரிப்பதற்காக பாஜக-வால் இறக்கிவிடப்பட்டிருப்பவர் தான் நடிகர் விஜய் என்கிறதே திமுக?

விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால், சிறுபான்மையினரின் வாக்குகள் நமக்கு வராது என திமுக-வினர் பயப்படத் தொடங்கிவிட்டார்கள். எனவே, திமுக-வின் குறைகளை அவர்களாகவே வெளிப்படுத்தி வருகிறார்கள். ‘மைண்ட் வாய்ஸ்’ என்று திமுக சத்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறது.

தமிழக காங்கிரஸார் இம்முறை தங்களுக்கு 65 தொகுதிகள் வேண்டும் என திமுக-விடம் கேட்கப் போகிறார்களாமே?

2016 சட்டப்பேரவை தேர்தலில் இதே காங்கிரஸ் திமுக-வுடன் கூட்டணியில் இருக்கும் போது தோல்வியை சந்தித்தது. அப்போது, காங்கிரஸ் 40 சீட்களை வாங்கினார்கள். ஆனால், அவர்கள் வெற்றிப் பெற்றது வெறும் 8 தான். காங்கிரஸால் தான் தோற்றோம் என அப்போது திமுக கூறியது. அப்படி இருக்கையில், 65 தொகுதிகளை காங்கிரஸுக்கு கொடுத்து விடுமா திமுக? 65 தொகுதி வேண்டுமென்றால் காங்கிரஸ் தனித்துத் தான் நிற்க வேண்டும். அதற்கு முன்பாக 65 வேட்பாளர்களை அவர்கள் தேட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x