Published : 23 Jul 2025 05:32 AM
Last Updated : 23 Jul 2025 05:32 AM
சென்னை: தமிழகம் முழுவதும் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வரும் 25-ம் தேதி திருப்போரூரில் இருந்து தொடங்குகிறார்.
இதுதொடர்பாக நேற்று பாமக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாமக தலைவர் அன்புமணி வரும் 25-ம் தேதி திருப்போரூரில் தொடங்கி தமிழகம் முழுவதும் 100 நாள்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
சமூக நீதிக்கான உரிமை, வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, வேலைக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை உட்பட 10 அம்சங்களை முன்வைத்து இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.
பசுமைத் தாயகம் நாளாக கொண்டாடப்படும் பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளான ஜூலை 25-ம் தேதி திருப்போரூரில் தொடங்கி முக்கிய தொகுதிகள் வழியாக தமிழ்நாடு நாளான நவ.1-ம் தேதி தருமபுரியில் சுற்றுப்பயணம் நிறைவடையவுள்ளது.
இதன்படி ஜூலை 25 - திருப்போரூர் (தொடக்க விழா), ஜூலை 26 - செங்கல்பட்டு, உத்திரமேரூர், ஜூலை 27- காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஜூலை 28- அம்பத்தூர், மதுரவாயல், ஜூலை 31 - கும்மிடிப்பூண்டி, ஆக.1- திருவள்ளூர், திருத்தணி, ஆக.2- சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆக.3- ஆற்காடு, வேலூர், ஆக.4- வாணியம்பாடி, திருப்பத்தூர். அடுத்தகட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT