Published : 22 Jul 2025 05:50 AM
Last Updated : 22 Jul 2025 05:50 AM
சென்னை: புரசைவாக்கம் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் முன்பு விழுந்த மரத்தை வருவாய்த் துறையினர் அகற்றாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். சென்னை புரசைவாக்கம் தாலுகா அலுவலக வளாகத்தில் 2 அலகுகள் கொண்ட இ-சேவை மையம் மற்றும் ஒரு ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்துக்கு தினமும் 150-க்கும் மேற்பட்டோர் வந்து, ஆதார் தொடர்பான சேவைகள் மற்றும் வருவாய்த்துறை, சமூக நலத்துறை சார்ந்த சான்றுகளை பெற விண்ணப்பித்து வருகின்றனர். சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இ-சேவை மையம் முன்பு இருந்த மரம், நேற்று முன்தினம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
இந்த மையத்தின் பணியாளர்கள் நேற்று கடும் சிரமத்துக்கிடையே மையத்துக்குள் நுழைந்துள்ளனர். அதன் பின்னர் காலை 10 மணிக்குமேல் பொதுமக்கள் அதிக அளவில் வரத் தொடங்கினர். ஒவ்வொருவரும் ஆபத்தான நிலையில், மரத்தின் மீது ஏறி, இறங்கி கால் நடுங்கியபடி இ-சேவை மையத்துக்குள் செல்ல நேர்ந்தது. வயதானவர்கள், மையத்துக்குள் செல்ல முடியாமல் திரும்பிச் சென்றனர்.
இது தொடர்பாக இ-சேவை மைய பணியாளர்களிடம் கேட்டபோது, “வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து விட்டோம்” என்றனர். இ சேவை மையத்துக்குள் செல்ல முடியாமல் திரும்பிச் சென்ற பொதுமக்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் பேரிடரால் பாதிக்கும் மாநகரமாக சென்னை உள்ளது. அதிகாரிகளும், அமைச்சர்களும், மேயரும் பேட்டி கொடுக்கும்போது, “489 ஹைட்ராலிக், டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள், 19 ஆயிரம் பணியாளர்கள் தயாராக உள்ளனர்” என கூறுகின்றனர்.
ஆனால், இங்கு ஒரு மரம் விழுந்துள்ளது. வருவாய்த்துறையிடம் களப் பணியாளர்கள், இயந்திரங்கள், வாகன வசதி இல்லை என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் மாநகராட்சியிடம் உதவி கேட்டார்களா, மாநகராட்சி நேரத்தோடு உதவ மறுத்ததா என்பது தெரியவில்லை. இந்த சிற்றிடரைக்கூட எதிர்கொள்ள முடியாத வருவாய்த்துறை, பேரிடரை எப்படி எதிர்கொள்ளும் என்பதை நினைத்தாலே, சென்னையில் வசிக்க அச்சமாக உள்ளது.
இ-சேவை மையத்துக்குள் செல்வது என்னவோ சாகசம் புரிவது போன்று உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் விவரம் பெற பலமுறை கைபேசி வழியாக தொடர்புகொண்டும், அவரிடம் விவரம் பெற முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT