Published : 22 Jul 2025 08:25 AM
Last Updated : 22 Jul 2025 08:25 AM
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் களம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் யார் மெஜாரிட்டியை கைப்பற்றுவது என்பதில் கூட்டணிகளுக்குள் மட்டுமல்லாது... கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்குள்ளேயே நீயா நானா யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டமிடும் புதுச்சேரியின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், தங்களது தொகுதிகளை தாங்களே தேர்வு செய்து, மக்களுக்கான நல உதவிகளை தாராளமாக வாரி வழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்குமா... அப்படியே கிடைத்தாலும் இந்தத் தொகுதி கிடைக்குமா என்றெல்லாம் தெரியாத நிலையிலும் சிலர் பெருத்த நம்பிக்கையுடன் தொகுதிகளுக்குள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதேபோல் இரண்டு முக்கிய கூட்டணியிலும் உள்ள கட்சிகளும் தங்களுக்கு இத்தனை தொகுதிகள் என கூட்டணிக்குள்ளேயே கொடிபிடிக்கத் தொடங்கிவிட்டன.
கடந்த முறை என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக-வை உள்ளடக்கிய என்டிஏ கூட்டணி புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்தது. இருந்த போதும் 2024 மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் காங்கிரஸிடம் என்டிஏ கூட்டணி தோற்றுப் போனது. இந்த நிலையில், இப்போது புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு தலைமை வகிப்பது காங்கிரஸா, திமுகவா என்பதில் பெரும் போட்டியே நடக்கிறது. புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக 6 எம்எல்ஏ-க்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளது. காங்கிரஸுக்கு 2 எம்எல்ஏ-க்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதை மனதில் வைத்து, தங்கள் தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என கணக்குப் போடுகிறது புதுச்சேரி திமுக.
இதன் வெளிப்பாடாக, காங்கிரஸும் திமுக-வும் பரஸ்பரம் வார்த்தைகளால் தாக்குதல் நடத்தி வருகின்றன. இப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கும் திமுக, கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் தனது தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என ஆர்வம் காட்டுகிறது. அதனால், தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் தங்கள் தலைமையில் தான் கூட்டணி என திமுக-வினர் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். அதே சமயம், இழந்த பெருமையை இம்முறை எப்படியேனும் மீட்டெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது காங்கிரஸ்.
இப்படி ஒரே கூட்டணியில் இருக்கும் இரண்டு முக்கிய கட்சிகளும் ஆளுக்கொரு கணக்குப் போடுவதால் அவ்வப்போது வார்த்தை மோதலும் வெடித்து வருகிறது. “காங்கிரஸ் ஒரு ஓடாத ஓட்டை வண்டி” என திமுக மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா கடுமையாக விமர்சிக்க, இதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ், “ஓடாத வண்டியில் ஏற வேண்டாம், துணிவிருந்தால் தனித்துப் போட்டியிடுங்கள்” என்று பதிலடி கொடுத்தது.
இதன் அடுத்த நகர்வாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா திமுக செயல்வீரர்கள் கூட்டங்களில், “2026 தேர்தலில் இண்டியா கூட்டணியில் 20 தொகுதிகளை கேட்டுப் பெற முடிவுசெய்துள்ளோம். கூட்டணி கட்சிகளுக்கு 10 தொகுதிகளை ஒதுக்க உள்ளோம்” எனப் பேசி வருகிறார். இதனைத் தொடர்ந்து ராகுல், சோனியா, கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு கடிதங்களை எழுதித் தள்ளிய காங்கிரஸ்காரர்கள், ‘இண்டியா கூட்டணியில் காங்கிரஸுக்கு 20 தொகுதிகளை பெற முடியாவிட்டால் அனைத்து இடங்களிலும் நாம் தனித்தே போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிட்டால் நிச்சயம் 18 இடங்களுக்கு மேல் வெல்வோம்’ என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, "திமுக-வின் நிலைப்பாட்டை எதிர்க்கட்சித்தலைவர் சிவா தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சிகள் சில கருத்துகளைச் சொல்வார்கள். அதனால் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிடாது. எங்களுக்கு எத்தனை தொகுதி என்பதை நாங்கள் முடிவு செய்ய முடியாது. கட்சி தலைமை தான் முடிவு செய்யும். அதேபோல் திமுக-வுக்கு எத்தனை இடம் என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார்.
திமுக 20 தொகுதிகளைக் கேட்பதால் காங்கிரஸிலும் 20 தொகுதிகளைக் கேட்க வேண்டும் என மேலிடத்துக்கு கட்சியினர் கடிதம் எழுதியது ஏட்டிக்குப் போட்டியல்ல. அவர்கள் தங்களது எண்ணங்களை கட்சித் தலைமைக்கு தெரிவித்துள்ளனர். எங்கள் கட்சித்தலைமை எத்தனை தொகுதிகளில் நிற்க வேண்டும் என்று சொல்கிறார்களோ அதில் நிற்போம். தமிழகத்தில் திமுக தலைமையிலும் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலும் ஆட்சி அமைப்போம்" என்றார்.
இண்டியா கூட்டணி களேபரங்கள் இப்படி இருக்க, என்டிஏ கூட்டணியிலும் ஏகத்துக்கு களேபரம் தான். இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக 15 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்கிறது. பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தொண்டர்களிடம் பேசுகையில், "கடந்த முறை பாஜக 9 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களை வென்றது. இந்த முறை 12 சீட்டோ அல்லது 15 சீட்டோ எதுவாக இருந்தாலும் 100 சதவீத வெற்றியைப் பெறுவோம்" என்று சொன்னது என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி பாஜக அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, “எந்த ஒரு கட்சிக்கும் தங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும் என்று கேட்க அதிகாரம் உண்டு. ஆனால், இறுதி முடிவை கூட்டணி கட்சி தலைவர்கள் சுமுகமாக பேசி முடிப்பார்கள்" என்று மையமாகச் சொன்னார். தேர்தல் நெருங்க நெருங்க புதுச்சேரியில் கூட்டணி கட்சிகளுக்குள் இன்னும் ரக ரகமாய் குஸ்திகள் அரங்கேறலாம். அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT