Published : 22 Jul 2025 08:52 AM
Last Updated : 22 Jul 2025 08:52 AM

‘ஈரோடு கிழக்கை இழந்தோம்... மொடக்குறிச்சியை மீண்டும் மீட்போம்!’ - ‘உரிமைக்குரல்’ எழுப்பும் காங்கிரஸ்

மக்கள் ராஜன், டாக்டர் சரஸ்வதி, கே.வி.ராமலிங்கம்

தமிழகத்தில் தாமரை மலரவே, மலராது என்று திமுக கூட்டணிக் கட்சிகள் முழங்கிக் கொண்டிருந்த சமயத்தில், பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தின் மொடக்குறிச்சி தொகுதியில் 2021-ல் தாமரையை மலரவைத்து தனது செல்வாக்கைக் காட்டியது பாஜக. அப்போது இந்தத் தொகுதியில் போட்டியிட்ட திமுக துணைப் பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை பாஜக புதுமுகமான டாக்டர் சரஸ்வதி தோற்கடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இப்போது பாஜக-விடம் இருந்து இந்தத் தொகுதியைக் கைப்பற்ற காங்கிரஸ் ஆளுக்கு முந்தி களமிறங்கி இருக்கிறது.

ஈவி​கேஎஸ் இளங்​கோவன் மறை​வைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத் தேர்​தலில் தானே நேரடி​யாக போட்​டி​யிட்டு அந்​தத் தொகு​தியை காங்​கிரஸிடம் இருந்து கைப்​பற்​றியது திமுக. இனி ஈரோடு கிழக்கு தங்​களுக்கு ஒதுக்​கப்பட வாய்ப்​பில்லை என்​ப​தால், ஏற்​கெனவே தாங்​கள் வென்ற மொடக்​குறிச்சி தொகு​திக்​காக இப்போது ‘உரிமைக்​குரல்’ எழுப்​பத் தொடங்கி விட்​டது காங்​கிரஸ்.

அண்​மை​யில் நடை​பெற்ற ஈரோடு தெற்கு மாவட்ட காங்​கிரஸ் நிர்​வாகி​கள் கூட்​டத்​தில், இதற்​காக தீர்​மானம் நிறை​வேற்றி இருக்​கி​றார்​கள். அடுத்​தகட்​ட​மாக தங்​களின் விருப்​பத்தை மாநிலத் தலை​மைக்​கும் மத்​திய தலை​மைக்​கும் கொண்டு செல்​லத் தயா​ராகி வரு​கி​றார்​கள். இதுகுறித்து நம்​மிடம் பேசிய ஈரோடு தெற்கு மாவட்ட காங்​கிரஸ் தலை​வர் மக்​கள் ராஜன், “ஈவி​கேஎஸ் இளங்​கோவன் மறைவுக்​குப் பிறகு, முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோளை ஏற்​று, தொகு​தியை திமுக-வுக்கு விட்​டுக் கொடுத்​தோம்.

தற்​போது, மீண்​டும் ஈரோடு கிழக்கை நாங்​கள் கேட்​டுப் பெற முடி​யாத சூழலில், ஏற்​கெனவே 2006-ல் காங்​கிரஸ் வென்ற மொடக்​குறிச்சி தொகு​தியை எங்​களுக்கு ஒதுக்க வேண்​டும். இதை மனதில் வைத்து மொடக்​குறிச்சி தொகு​தி​யில் மொத்​தம் 1450 கமிட்​டிகளை அமைத்து கட்​சியை பலப்​படுத்தி உள்​ளோம். இம்​முறை மொடக்​குறிச்​சியை எப்​படி​யா​வது காங்​கிரஸுக்கு கேட்​டுப்​பெற வேண்​டும் என்​ப​தில் கட்சி நிர்​வாகி​கள் உறு​தி​யாக இருக்​கி​றார்​கள்” என்​றார்.

மொடக்​குறிச்சி தொகு​தி​யில் 6 நாட்​கள் நடைபயணம் மேற்​கொண்ட மக்​கள் ராஜன், சமீபத்​தில் செல்​வபெருந்​தகையை அழைத்து வந்து பொதுக்​கூட்​ட​மும் நடத்​தி​யுள்​ளார். ராஜன் மட்​டுமல்​லாது முன்​னாள் எம்​எல்​ஏ-​வான ஆர்​.எம்​.பழனி​சாமி​யும் இந்​தத் தொகு​தி​யில் போட்​டி​யிடும் திட்​டத்​தில் இருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.

அதி​முக கூட்​ட​ணி​யில் இம்​முறை​யும் தொகுதி தங்​களுக்கே என தீர்க்​க​மாக இருக்​கும் பாஜக, சிட்​டிங் எம்​எல்​ஏ-​வான சரஸ்​வ​திக்​குப் பதிலாக அவரது மரு​மகள் கிருத்​திகா ஷிவ்​கு​மாரை நிறுத்​தும் யோசனை​யில் இருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள். இந்​தத் திட்​டத்​துடன் தனது ‘அறம் அறக்​கட்​டளை’ மூல​மாக தொகு​திக்​குள் மலிவு விலை உணவகம், மலிவு விலை மருத்​து​வம் போன்​றவற்றை செயல்​படுத்தி வரு​கி​றார் கிருத்​தி​கா.

இது தங்​களுக்கு சாதக​மான தொகுதி என்​ப​தால் அதி​முக தரப்​பிலும் மாவட்​டச் செய​லா​ளர் கே.​வி.​ரா​மலிங்​கம், முன்​னாள் எம்​பி-​யான செல்​வ​கு​மார சின்​னையன், முன்​னாள் எம்​எல்​ஏ-​வான சிவசுப்​பிரமணி​யன் ஆகி​யோ​ரும் அதி​முக தலை​மை​யிடம் தொகு​திக்​காக லாபி செய்ய ஆரம்பித்திருக்கிறார்​கள்.

அதே​போல் திமுக மறு​படி​யும் இங்கு போட்​டி​யிடலாம் என்ற நினைப்​பில், நெச​வாளர் அணி​யைச் சேர்ந்த எஸ்​.எல்​.டி.சச்​சி​தானந்​தம், மொடக்​குறிச்சி ஒன்​றிய திமுக செய​லா​ளர் குணசேகரன் ஆகி​யோ​ரும் எம்​எல்ஏ கனவில் இருக்​கி​றார்​கள். இவர்​களுக்கு நடு​வில், நாமக்​கல் மக்​கள​வைத் தொகுதி வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டு, பிறகு வாபஸ் பெறப்​பட்ட கொமதேக இளைஞரணி செய​லா​ளர் சூரியமூர்த்​தி​யும் மொடக்​குறிச்சி கனவில் இருக்கிறார்.

இத்​தனை பேர் மொடக்​குறிச்​சிக்​காக மோதி​னாலும் அதி​முக கூட்​ட​ணி​யில் பாஜக-​வும் திமுக கூட்​ட​ணி​யில் காங்​கிரஸும் இந்​தத் தொகு​திக்​காக செய்​து​வ​ரும் களப்​பணி​கள் தான் அனை​வரது கவனத்​தை​யும் ஈர்​த்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x