Published : 21 Jul 2025 08:06 PM
Last Updated : 21 Jul 2025 08:06 PM
“கேரளாவின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும், கேரள மக்களின் முன்னேற்றத்துக்கும் அரசியல் ரீதியாகவும், ஆட்சி பொறுப்பு என்ற வகையிலும் வி.எஸ்.அச்சுதானந்தனின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தகுந்தது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: “விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சிறந்த தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான வி.எஸ்.அச்சுதானந்தனின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழு தனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.
கேரள மாநில உழைப்பாளி மக்களின் நலன்களுக்காகவும், மாநிலத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் அரும்பாடுபட்ட வி.எஸ். அச்சுதானந்தன், மாநிலத்தின் முதல்வர், இரண்டு முறை எதிர்க்கட்சி தலைவர், ஏழு முறை சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றிவர்.
சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த அச்சுதானந்தன் கயிறு திரிக்கும் தொழிலாளியாக தன்னுடைய வாழ்கையை துவங்கினார். திருவாங்கூர் மன்னராட்சிக்கு எதிராக தனது போராட்டத்தை துவக்கிய அவர் புகழ்பெற்ற புன்னப்புரா வயலார் போராட்டத்தின் களநாயகர்களில் ஒருவராக விளங்கியவர். தனது இளம் வயதிலேயே கட்சியுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட வி.எஸ்.அச்சுதானந்தன் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலப்புழா மாவட்ட செயலாளராக, மாநில கவுன்சில் உறுப்பினராக, தேசிய கவுன்சில் உறுப்பினராக செயல்பட்டவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் வி.எஸ்.அச்சுதானந்தனும் ஒருவர். மகத்தான தலைவர்களான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு, ஏ.கே. கோபாலன். கிருஷ்ணன் பிள்ளை, ஈ.கே.நாயனார் உள்ளிட்ட அனைத்து முன்னணி தலைவர்களோடு இணைந்து பணியாற்றிய பெருமை அவருக்கு உண்டு.
கட்சியின் மாவட்ட செயலாளர், மாநில செயலாளர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய வி.எஸ். அச்சுதானந்தன் கட்சி அமைப்பின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறார். பல ஆண்டுகள் தலைமறைவாகவும் சிறையிலும் இருந்தவர். விவசாய இயக்கத்தை வளர்த்து வலுவுள்ள அமைப்பாக உருவாக்கியவர் வி.எஸ்.அச்சுதானந்தன்
கேரளாவின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு, கேரள மக்களின் முன்னேற்றத்திற்கு அரசியல் ரீதியாகவும், ஆட்சி பொறுப்பு என்ற வகையிலும் அவரது பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும். அவரது மறைவு என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்லாது. இடதுசாரி இயக்கங்களுக்கும். உழைப்பாளி வர்க்கத்திற்குமான பேரிழப்பாகும்.
அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதோடு அவரை இழந்து வாடும் அவரது மனைவி, மகன் மற்றும் மகளுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தனது ஆறுதலையும் தமிழ்நாடு மாநிலக்குழு தெரிவித்துக் கொள்கிறது.
வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சிக் கொடிகளை மூன்று நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டுமென்றும், கட்சி நிகழ்ச்சிகளை மூன்று நாட்களுக்கு ரத்து செய்து, இரங்கல் கூட்டங்களை நடத்துமாறும் கட்சி அணிகளை மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT