Published : 21 Jul 2025 07:01 PM
Last Updated : 21 Jul 2025 07:01 PM

லயோலா கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காலியிடம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி, உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுக்க முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், லயோலா கல்லூரியில் 18 உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழக கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை லயோலா கல்லூரியில் 18 உதவிப் பேராசிரியர்கள், ஒரு நூலகர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து, கல்லூரி கல்வி இணை இயக்குநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, 19 பேர் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படி உத்தரவிடக் கோரி, கல்லூரி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தபோது, லயோலா கல்லூரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன் லால், கல்லூரியில் 149 ஆசிரியர் பணியிடங்களுக்கும், 59 ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த பணியிடங்களை நிரப்ப கல்லூரிக்கு முழு உரிமை உள்ளதாக வாதிட்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், 1999 - 2000-ம் ஆண்டில் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் விவரம், 1999-ம் ஆண்டு முதல் பணியாற்றும் பேராசிரியர்கள் விவரம், நியமனம் தொடர்பான கல்லூரி குழு தீர்மான விவரங்கள் உள்ளிட்ட விவரங்கள் சமர்ப்பிக்கப்படாததால், நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என விளக்கமளித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறுபான்மை கல்லூரிகளில், பேராசிரியர்களின் கல்வித் தகுதி குறித்து தீர்மானிக்க மட்டுமே மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், காலியிடங்கள் விவரங்களை தரவில்லை என உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுக்க முடியாது எனவும் கூறி, ஒப்புதல் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், மூன்று மாதங்களில் லயோலா கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட 19 நியமனங்களுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x