Last Updated : 21 Jul, 2025 04:55 PM

19  

Published : 21 Jul 2025 04:55 PM
Last Updated : 21 Jul 2025 04:55 PM

ஜெ. கூட்டணி வைத்தபோது பாஜக ‘நெகட்டிவ் போர்ஸாக’ தெரியவில்லையா? - அன்வர் ராஜாவுக்கு நயினார் கேள்வி

அன்வர் ராஜா | நயினார் நாகேந்திரன்: கோப்புப் படங்கள்

திருநெல்வேலி: “பாஜகவை நெகட்டிவ் போர்ஸ் என்று கூறும் அன்வர் ராஜா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைக்கும்போது அதிமுகவில்தான் இருந்தார், இப்போது என்ன பிரச்சினை அவருக்கு உள்ளது என தெரியவில்லை.” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வினவியுள்ளார்.

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு திருநெல்வேலியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் ஆலோசனை மேற்கொண்டார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது, தமிழகத்துக்கு வரும் பிரதமரை வரவேற்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: “தூத்துக்குடியில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இனி இரவிலும் அங்கு விமான சேவை இருக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என தொடர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு வரும் பாரதப் பிரதமரை 25 ஆயிரம் பாஜக-வினர் திரண்டு வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாஜகவை ‘நெகட்டிவ் போர்ஸ்’ என்றும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது என்றும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் திமுகவில் இணைந்துள்ள அன்வர் ராஜா கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைக்கும்போது அன்வர் ராஜா கட்சியில்தான் இருந்தார். இப்போது என்ன பிரச்சனை அவருக்கு உள்ளது என தெரியவில்லை.

உலகம் போற்றும் தலைவராக பாரத பிரதமர் மோடி உள்ளார். வாழும் ராஜேந்திர சோழனாக அவர் இருக்கும் நிலையில், அவரால் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் நன்மையே கிடைக்கும். அதிமுக –பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்து தமிழக முதல்வர் பதற்றத்திலேயே இருக்கிறார். கடந்த 4 ஆண்டுகலாக தமிழக மக்களுக்கு அவர் எதுவுமே செய்யவில்லை.

மகளிர் உரிமை தொகையை முழுமையாக கொடுத்திருக்கலாம். ஆனால் தற்போது வரை கொடுக்கவில்லை. தேர்தல் வரக் கூடிய நிலையில் அதற்கான நடவடிக்கைகளை தற்போது தொடங்கியுள்ளனர். மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்து தற்போது அவர் அரசியல் செய்து வருகிறார். தமிழர்கள் அனைவரும் ஓரணியில் தான் இருக்கிறோம். பிறகு என்ன ஓரணியில் தமிழ்நாடு. சுந்தரேசன் போன்ற ஒரு சில காவல் துறை அதிகாரிகள் தமிழகத்தில் இருப்பதாலேயே மக்கள் நடமாட முடிகிறது.

24 மணி நேரத்தில் தமிழகத்தில் தர்மபுரி, கரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 10 கொலைகள் நடைபெற்றுள்ளன. நகை திருட்டு சம்பவங்கள் காவல்துறைக்கு தெரிந்தே நடக்கிறது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் சாடிஸ்ட் போன்று செயல்படுகிறார். அவர் அதிகாரிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்.

எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்து தான் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற நிலை மாறி டேவிட்சன் தேவசீர்வாதத்தினாலேயே திமுக வீட்டிற்கு அனுப்பப்படும். கல்லூரி வாசல்களில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் மாணவர்களை கட்சியில் இணைப்பதற்காக சென்றிருக்க மாட்டார்கள் கஞ்சா விற்பனை செய்வதற்காக சென்றிருப்பார்கள். தமிழகத்தில் பல இடங்களில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தை கூட்டணியில் இணைப்பதற்கான நடவடிக்கையை பழனிசாமி எடுத்து வருவதாக சில அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருவது குறித்த கேள்விக்கு, தரமான அரசியல் விமர்சகர்களாக இருந்தால் இது போன்ற கருத்துக்களை அவர்கள் தெரிவிக்க மாட்டார்கள். அவர்கள் தரம் இதன் மூலம் தெரியவருகிறது." என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x