Published : 21 Jul 2025 01:07 PM
Last Updated : 21 Jul 2025 01:07 PM
நாமக்கல்: கிட்னி விற்பனை செய்ததாக பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் பேசிய ஆடியோ சமூக வலை தளங்களில் நேற்று வைரலானது. இதையடுத்து, ஆடியோவின் உண்மைத் தன்மை தொடர்பாக நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் தறிப்பட்டறைகள், சாய ஆலைகள் ஏராளமான இயங்கி வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் வறுமையைப் பயன்படுத்தி, தொழிலாளர்களின் கிட்னியை விலைக்கு வாங்கி இடைத்தரகர்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஆனந்தன் என்ற இடைத்தரகர் மூலம் பெண் ஒருவர் தனது கிட்னியை விற்பனை செய்ததும், அதற்காக அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைத் தராமல் அலைக்கழிப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதையடுத்து, நாமக்கல் ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் விசாரணை நடத்தினர். மேலும், இடைத்தரகர் ஆனந்தன் மீது பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவான அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேலும், சென்னை சுகாதாரத் துறை சட்ட இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கடந்த 18-ம் தேதி பள்ளிபாளையத்தில் கிட்னி விற்பனை செய்ததாக கூறிய பெண் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடன் பிரச்சினையால் கிட்னியை அவர் விற்பனை செய்தது தெரியவந்தது.
அவர் அளித்த தகவல் அடிப்படையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையைச் சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் பள்ளிபாளையத்தில் விசாரணை நடத்த வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே, கிட்னியை விற்பனை செய்ததாக பள்ளிபாளையத்தைச் சேர்ந்த ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் நேற்று வைரலானது.
ஆடியோவில், ‘பெரம்பலூரில் உள்ள மருத்துவமனையில் தனது கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் விற்பனை செய்ததாகவும், தனது கடனை அடைக்க இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாகவும்’ தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த ஆடியோவின் உண்மைத் தன்மை தொடர்பாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT