Published : 21 Jul 2025 01:28 PM
Last Updated : 21 Jul 2025 01:28 PM
சென்னை: மதபோதகர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி. ஞான திரவியத்திற்கு 6 மாதங்களாக சம்மன் வழங்காத காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகத்துக்குச் சென்ற இட்டேரி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் என்பவரை, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி முன்னாள் எம்.பி. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக காட்ஃப்ரே நோபிள் அளித்த புகாரின் அடிப்படையில், ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி புகார்தாரான காட்ஃப்ரே நோபிள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தாக்குதல் வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி வேல்முருகன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற பதிவு துறையின் சார்பில் முன்னாள் எம்.பி ஞான திரவியத்திற்கு எதிரான வழக்கு தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், கடந்த நவம்பர் மாதமே ஆஜராக கூறி, ஞான திரவியத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக திருநெல்வேலி நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைக் குறிப்பிட்ட நீதிபதி, ஆறு மாதங்களாக சம்மன் வழங்காதது ஏன்? ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர், எம்பி - எம்எல்ஏக்களாக இருந்தால் சம்மன் வழங்க மாட்டீர்களா? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகவும், எம்பி - எம்எல்ஏக்களுக்கு எதிராகவும் சம்மன் வழங்க இயலாது என தெரிவித்து விட்டால் , சம்மன் அனுப்புவதற்காக தனி பிரிவை உருவாக்க நேரிடும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இல்லாவிட்டால், இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
பின்னர் இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, முன்னாள் எம்.பி ஞான திரவியத்திற்கு சம்மன் அனுப்பியது குறித்தும், அவருக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT