Published : 21 Jul 2025 12:47 PM
Last Updated : 21 Jul 2025 12:47 PM
அதிமுகவின் ஆரம்ப கால உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்வர் ராஜாவின் பேட்டி வெளியாகி இருந்தது. அதில், “திராவிட மண்ணில் பாஜக காலூன்ற துடிப்பதை எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அன்வர் ராஜா, “தமிழ்நாட்டில் காலூன்ற துடிப்பது பாஜக-வின் எண்ணம். அது ஒருக்காலும் நடக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்று பதில் கூறியிருந்தார்.
அன்வர் ராஜாவின் இந்த ஒற்றை வரி பதில் சமூக வலைதளம் எங்கும் தீயாய் பரவியது. ஏற்கெனவே பாஜக கூட்டணியால் அதிமுக கூடாரத்துக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக ஊகத்தின் அடிப்படையில் பேசிய பலரும் அன்வர் ராஜாவின் இந்த பேட்டிக்குப் பிறகு அதை உறுதிப்படுத்தத் தொடங்கினர்.
இந்த சூழலில்தான் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார் அன்வர் ராஜா. அவர் அண்ணா அறிவாலயம் வருகை தந்த செய்தி வெளியானதுமே அவரை அதிமுகவிலிருந்து நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
யார் இந்த அன்வர் ராஜா? - திமுகவிலிருந்து விலகி அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்த காலம் முதல் அக்கட்சியில் அடிப்படையாக உறுப்பினராக இருந்து வந்தவர் அன்வர் ராஜா. 1986ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவருக்கு முதல்முறையாக வாய்ப்பளிக்கப்பட்டது. அதிமுக அந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த போதும் கூட மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அன்வர் ராஜா வெற்றி பெற்றார்.
பின்னர் மதுரையில் நடைபெற்ற எம்ஜிஆர் மன்ற மாநாட்டில் அன்வர் ராஜாவை அழைத்து பேச வைத்த எம்ஜிஆர் அவரை அதிமுகவின் ஆட்சிமன்றக் குழுவிலும் இடம்பெறச் செய்து கவுரவித்தார். மொத்தம் 15 பேர் இடம்பெற்ற அந்த குழுவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அன்வர் ராஜாவும் மட்டுமே அமைச்சர் பதவியில் இல்லாதவர்கள்.
எம்ஜிஆர் மறைந்தபின் அதிமுக ஜெ அணி - ஜா அணி என்று இரண்டாக உடைந்த போது எம்ஜிஆரின் மனைவி ஜானகிக்கு ஆதரவளித்தார் அன்வர் ராஜா. 89 சட்டப்பேரவை தேர்தலில் ஜானகி அணி சார்பில் வேட்பாளராக களமிறங்கி தோல்வி அடைந்தார். அதன் பிறகு கட்சி ஜெயலலிதா வசம் சென்றபோது ஜெயலலிதா முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 2001-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அன்வர் ராஜாவுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது.
2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்வர் ராஜா, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தார். சசிகலாவின் தலைமையை அதிமுக ஏற்கவேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவர் 2021-ம் ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, பின்னர் 2023-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று மீண்டும் கட்சியில் இணைந்தார்.
அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது முதலே அன்வர் ராஜா தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்தார். குறிப்பாக, முத்தலாக் மசோதாவை பாஜக அரசு மக்களவையில் கொண்டுவந்தபோது அப்போதைய அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் அதை ஆதரித்துப் பேசினார். அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய போது, ரவீந்திரநாத்தின் நிலைப்பாடு அதிமுகவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு அல்ல என்று சொன்னார் அன்வர் ராஜா.
தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்ததால் அவருக்கு 2021 தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன் பிறகு 2024 மக்களவை தேர்தலிலும் அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் அவர் வேறு எந்த கட்சிக்கும் செல்லாமல் தொடர்ந்து அதிமுகவிலேயே இருந்து வந்தார்.
இப்படியான சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான பேட்டியில் பாஜக குறித்து அன்வர் ராஜா சொன்ன வார்த்தைகள் இன்று அவரை அதிமுகவில் இருந்து விலகி திமுக பக்கம் சாய வைத்திருக்கின்றன. அந்த பேட்டியிலே கூட பாஜகவை மட்டும்தான் அவர் விமர்சித்தாரே தவிர எந்த இடத்திலும் அவர் அதிமுகவை விட்டுக் கொடுக்கவில்லை.
அந்த பேட்டியில் “இபிஎஸ் தனது சுயநலத்திற்காக அதிமுக-வை பாஜக-விடம் அடமானம் வைத்துவிட்டதாக வரும் விமர்சனங்களை கவனிக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு, “இந்த விமர்சனத்தில் உண்மை இல்லை. அதிமுக-வை யாரும் யாரிடத்திலும் அடமானம் வைக்க முடியாது. இன்றுவரை அதிமுக-வின் காப்பாளராகவே இபிஎஸ் விளங்கி வருகிறார்” என்று பதிலளித்திருந்தார் அன்வர் ராஜா.
எம்ஜிஆர் காலம் தொட்டு படிப்படியாக கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அன்வர் ராஜா இன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு திமுகவில் அடைக்கலம் அடைந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்வர் ராஜாவின் முழு பேட்டியை வாசிக்க > “தமிழ்நாட்டில் பாஜக ஒருக்காலும் காலூன்ற முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து!” - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா அதிரடி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT