Published : 21 Jul 2025 10:30 AM
Last Updated : 21 Jul 2025 10:30 AM
சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய நாள் முதலே கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து செயல்பட்டு வந்தவர் அன்வர் ராஜா. ராமநாதபுரத்தில் செல்வாக்கு மிகுந்த நபராக அறியப்படுகிறார். மிகச் சிறந்த சொற்பொழிவாளரும் கூட.
1986 உள்ளாட்சித் தேர்தலில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அரசியலில் அடியெடுத்து வைத்த அவர் படிப்படியாக உயர்ந்து சட்டமன்ற உறுப்பினரானார். கடந்த 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா ஆட்சியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்தார். 2014 ஆம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் முகம்மது ஜலீலை தோற்கடித்து 16-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா பக்கம் நின்றதால் கடந்த 2021 டிசம்பர் 1-ம் தேதி இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு கடந்த, 2023ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து சிஏஏ, வக்ஃப் திருத்தம் உள்ளிட்ட சட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்தார். அதிமுகவின் சிறுபான்மை சமூகத்தின் முகமாக அறியப்பட்டவர். அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்ததைத் தொடர்ந்து அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
அண்மையில் இந்து தமிழ் திசை நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “தமிழ்நாட்டில் காலூன்ற துடிப்பது பாஜக-வின் எண்ணம். அது ஒருக்காலும் நடக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்று அன்வர் ராஜா கூறியிருந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
அன்வர் ராஜாவின் முழு பேட்டியை வாசிக்க > “தமிழ்நாட்டில் பாஜக ஒருக்காலும் காலூன்ற முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து!” - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா அதிரடி
இந்த நிலையில் இன்று (ஜூலை 21) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா. எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இன்று வரை அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய அன்வர் ராஜா திமுகவில் இணைந்திருப்பது அதிமுகவில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. முன்னதாக இன்று அன்வர் ராஜாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT