Published : 21 Jul 2025 09:24 AM
Last Updated : 21 Jul 2025 09:24 AM
திருவாரூர்: திருவாரூரில் தங்கியிருந்த பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்காமல் சென்றது, அதிமுக, பாஜக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை ஜூலை 7-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கினார்.
இதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், பழனிசாமியின் பிரச்சார சுற்றுப்பயணத்தில் பாஜகவினரும் பங்கேற்க வேண்டும் என கட்சியினருக்கு நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், ஜூலை 18-ம் தேதி முதல் திருவாரூர், நாகை மாவட்டங்களில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, நேற்று முன்தினம் இரவு திருத்துறைப்பூண்டியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, திருவாரூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று ஓய்வெடுத்தார்.
இந்த சூழலில் நாகையில் பாஜக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, திருவாரூர் வழியாக சென்ற நயினார் நாகேந்திரனுக்கு பாஜகவினர், திருவாரூரில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, நயினார் நாகேந்திரன், பழனிசாமியை சந்திப்பார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவரை சந்திக்காமல் சென்றதால், இரு கட்சியின் தொண்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
சென்னையில் அதிமுக, பாஜக கூட்டணியை ஏப்.11-ம் தேதி உறுதி செய்து அமித்ஷா அறிவித்தபோது, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் நடைபெற போகிறது. முதல்வராக பழனிசாமி இருப்பார் என்றார். பின்னர், அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என பழனிசாமி தெரிவித்தார்.
இதுபோல அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே கூட்டணி ஆட்சி தொடர்பாக உள்ள மாறுபட்ட கருத்துகள் குறித்து கேள்வி எழுந்துவரும் நிலையில், பழனிசாமி பிரச்சாரங்களில் பாஜகவினரும் பங்கேற்று வருகின்றனர். ஆனால், பிரச்சாரங்களில் பழனிசாமி பேசும்போதெல்லாம் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என பொருள்பட பேசி வருகிறார்.
திருத்துறைப்பூண்டியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், “பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், பாஜகவினர் ஆட்சியில் பங்கு கேட்பார்கள் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆட்சியில் பங்குகொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல” என பழனிசாமி பேசினார். இதன்மூலம் அதிமுக தனித்து ஆட்சி ஆமைக்கும் என்பதை தெளிவாக பழனிசாமி தெரிவித்துவிட்டதாகவே அதிமுகவினர் பேசத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், திருவாரூரில் நேற்று நிகழ்ச்சிகளை தள்ளிவைத்துவிட்டு முழு ஓய்வில் இருந்த பழனிசாமியை, திருவாரூக்கு நேற்று வந்த நயினார் நாகேந்திரன் சந்திக்காமல் சென்றிருப்பது அதிமுக, பாஜக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்கள், பாஜகவினர் அதிமுகவை கபளீகரம் செய்துவிடுவார்கள் என திமுகவினர் கூறியதற்குதான், எதிர்க்கட்சித் தலைவர் அவ்வாறு பதில் அளித்துள்ளார். அதில் எந்த வித உள்நோக்கமும் இல்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தமிழகத்தில் அமையும். எந்தக் கட்சியின் ஆட்சி அமையும் என்பதை அப்போது அறிந்துகொள்ளலாம். 2026 தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து ஊடகங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT