Published : 21 Jul 2025 09:28 AM
Last Updated : 21 Jul 2025 09:28 AM
மாநில தலைவராக அண்ணாமலை இருந்தவரைக்கும் தமிழக பாஜக பரபரப்பான கட்சியாகப் பார்க்கப்பட்டது. திமுக, அதிமுக கொடிகள் கட்டிய கார்களுக்கு நிகராக பாஜக கொடி கட்டிய கார்களும் பட்டி தொட்டிகளில் கூட பவனி வந்தன. ஆனால், தற்போது இவை அனைத்துமே ஸ்லீப் மோடுக்குப் போய்விட்டது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறது. போதாக்குறைக்கு, அதிரடி அரசியல்வாதியான அண்ணாமலையும் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி பொழுதைக் கழிக்குமளவுக்கு ‘சும்மா’ இருக்கிறார்.
தமிழக பாஜக-வின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட பிறகு அமித் ஷா வருகை உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் மட்டும் அண்ணாமலையின் தலை தெரிந்தது. அதன் பிறகு அறிக்கைகளில் மட்டுமே அண்ணாமலையைப் பார்க்க முடிகிறது. சமீபத்தில் நடந்த பாஜக பூத் கமிட்டிக் கூட்டத்தில் கூட அண்ணாமலை தென்படவில்லை.
தலைவராக நியமிக்கப்பட்ட புதிதில் அண்ணாமலைக்கு காலணி எல்லாம் வாங்கிக் கொடுத்து வாஞ்சை காட்டிய நயினார், அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அண்ணாமலையை பின்னுக்குத் தள்ளினார். தமிழக பாஜக-வின் தற்போதைய நிலை குறித்து நயினார் தெரிவித்த சில கருத்துகள், அண்ணாமலையின் முந்தைய செயல்பாடுகளையே கேள்வி எழுப்புவதாக இருந்தது. இதனால், கட்சி நடவடிக்கைகளில் இருந்து அண்ணாமலை அடியோடு ஒதுங்கிக் கொண்டார்.
தன்னையும் பாஜக-வையும் விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக கோவையில் பிரத்யேக வார் ரூம் ஒன்றை வைத்திருந்தார் அண்ணாமலை. வார் ரூம் மூலமாக அண்ணாமலை தன்னை பிரதானப்படுத்திக் கொள்வதாக குற்றச்சாட்டுகள் கூட கிளம்பின. தலைவர் பதவியை இழந்த பிறகு அந்த வார் ரூமின் செயல்பாடுகளை சுருக்கியவர், தற்போது அதைக் கலைத்து பெங்களூருவுக்கும் டெல்லிக்கும் இரண்டு பிரிவாக மாற்றிவிட்டதாகச் சொல்கிறார்கள். மறு உத்தரவு வரும் வரை வேறு வேலைகள் கிடைத்தால் பார்க்கும்படி கோவை வார் ரூம் ஆட்களை அண்ணாமலை அறிவுறுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
முடிந்தவரை அரசியல் நிகழ்ச்சிகளை தற்போது தவிர்த்து வரும் அண்ணாமலை, ஆன்மிக நிகழ்ச்சிகள், ஆலய தரிசனம் என வலம் வந்துகொண்டிருக்கிறார். அண்மையில் கோவை அன்னூரில் இளைஞர்களுடன் சேர்ந்து மணிக்கணக்கில் கிரிக்கெட்டும் விளையாடினார். வழக்கமாக கோவையில் செய்தியாளர்களிடம் உற்சாகமாகப் பேசும் அண்ணாமலை, இப்போது செய்தியாளர்கள் சந்திப்பையே தவிர்க்கிறார். யாராவது மறித்துக் கேட்டாலும், ‘‘அண்ணா, நான் பேசும்போது பேசுகிறேன். இப்போது யாரிடமும் நான் வேலை பார்க்கவில்லை; தனி மனிதன். அதனால் மற்றவர்களின் கருத்துக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை” என்று விரக்தியுடன் பேசுகிறார்.
இதுதொடர்பாக கோவையில் இருக்கும் அண்ணாமலையின் ஆதரவாளர்களிடம் விசாரித்த போது, ‘‘அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்த போது ஆளும் திமுக கூட்டணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். அதனால், மாநிலம் முழுக்கவே அவருக்கு ஆதரவாளர்கள் பெருகினர். அதன் வெளிப்பாடு மதுரையில் அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அப்பட்டமாக தெரிந்தது. இன்றைக்கும் அவரது பெயரைச் சொன்னாலே பாஜக தொண்டர்கள் உற்சாகமடைகிறார்கள்.
திமுக அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் புகார்களை வெளியிட்டு ஆளும் கட்சியை மிரளவிட்டுக் கொண்டிருந்தார் அண்ணாமலை. அதிமுக-வையும் அவர் விட்டுவைக்கவில்லை. அவரது நோக்கமெல்லாம் தமிழக பாஜக-வின் வளர்ச்சி என்பதில் மட்டுமே இருந்தது. அண்ணாமலை காலத்தில் அப்படி இருந்த பாஜக இப்போது எப்படி இருக்கிறது என்பதை நீங்களே பார்க்கிறீர்கள்.
மடப்புரம் காவலாளி கஸ்டடி மரணம் ஒன்றை வைத்தே ஆளும் கட்சியை உண்டு இல்லை என ஒரு கை பார்த்திருப்பார் அண்ணாமலை. ஆனால், இப்போதுள்ள தலைமையால் அப்படியான நெருக்கடியை உண்டாக்கத் தெரியவில்லை. அதேசமயம், அண்ணாமலை பதவியில் இல்லாவிட்டாலும் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. அதனால், அறிக்கைகள் மூலமாக தமிழக பாஜக-வை பேசவைத்துக் கொண்டிருக்கிறார். நேரம் வரும் போது பாஜக தலைமை அவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றனர்.
அதிமுக உறவு வேண்டும்... அதன் மூலம் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலையை கொஞ்சம் தள்ளிவைத்தது பாஜக தலைமை. விளைவு, தமிழக பாஜக-வுக்கென அண்ணாமலை உருவாக்கி வைத்திருந்த பிம்பம் மெல்லம் கலைந்து கொண்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT