Published : 20 Jul 2025 05:32 PM
Last Updated : 20 Jul 2025 05:32 PM
புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசின் ஊழல் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் புகார் தர காங்கிரஸ் குழு இவ்வாரம் நேரம் ஒதுக்க கோரியுள்ளது. இதையடுத்து ஓரிரு நாட்களில் டெல்லி செல்ல இக்குழு திட்டமிட்டுள்ளது.
புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்., - பா.ஜ.க, கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி அரசின் மீது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், மதுபான தொழிற்சாலை அனுமதி வழங்குவதில் ஊழல், பொதுப்பணித் துறையில் 35 சதவீதம் கமிஷன், பத்திரம் பதிய லஞ்சம், முட்டை கொள்முதலில் ஊழல் என அடுக்கடுக்காக புகார் கூறி வருகிறார்.
மேலும், "என்.ஆர்.காங்., ஆட்சியில் நடக்கும் ஊழல்களை கணக்கெடுத்து வருகிறோம். இந்த ஊழல் பட்டியலை குடியரசுத்தலைவரிடம் அளிக்க உள்ளோம்" என தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து ஒவ்வொரு துறை ரீதியாக ஊழல் பட்டியலை காங்., கட்சி, தயார் செய்து வந்தது. ஊழல் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் நேரடியாக குடியரசுத்தலைவரை சந்தித்து புகார் அளிக்க காங்கிரஸார் முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, "மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமல கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள், உள்ளிட்ட 20 பேர் கொண்ட காங்., குழு, குடியரசுத் தலைவரை சந்தித்து என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக, அரசு மீதான ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் அளிக்க உள்ளனர்.
இதற்காக 23 அல்லது 24ம் தேதி குடியரசுத்தலைவரை சந்திக்க காங்கிரஸ் கட்சி சார்பில் நேரம் ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. டெல்லி செல்லும் குழுவினர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல், தலைவர் கார்கே ஆகியோரைச் சந்தித்து புதுவை அரசியல் நிலவரம், ஆளும் கட்சி மீதான ஊழல் புகார்கள் சம்பந்தமாக எடுத்துரைக்க திட்டமிட்டுள்ளனர். குடியரசுத்தலைவர் நேரம் ஒதுக்கியவுடன் ஒரிரு நாட்களில் புதுவையில் இருந்து காங்கிரஸார் குழுவாக புறப்பட திட்டமிட்டுள்ளனர்." என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT