Last Updated : 20 Jul, 2025 02:21 PM

 

Published : 20 Jul 2025 02:21 PM
Last Updated : 20 Jul 2025 02:21 PM

காவல் துறையில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சென்னை: "நெருப்பில்லாமல் புகையாது என்பதற்கேற்ப, காவல் துறையில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பதும், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதும் காவல் துணைக் கண்காணிப்பாளர் பேட்டியிலிருந்து தெளிவாகிறது" என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலின்போது. கரப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன் என்று மேடையில் முழங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு இன்று ஊழலில் ஊறி திளைத்து இருக்கிறது என்பதற்கு காவல் துறை துணை கண்காணிப்பாளரின் பேட்டியே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு துணைக் கண்காணிப்பாளராக சுந்தரேசன் பொறுப்பேற்றது முதல், மாவட்டத்தில் இருந்து மது பாட்டில்கள் கடத்தல், சட்டவிரோத மதுவிற்பனை, அனுமதியின்றி இயங்கும் டாஸ்மாக் பார்கள் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும், இது தொடர்பாக 1,200 வழக்குகள் பதியப்பட்டு 700 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும். இதன் காரணமாக மது விற்பனையில் ஈடுபட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, மேற்படி துணைக் கண்காணிப்பாளர் மீது அலுவலக ரீதியாக பழிவாங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து நேற்று பத்திரிகையாளர்களிடையே பேட்டி அளித்த துணைக் கண்காணிப்பாளர், சட்டம்-ஒழுங்கு மற்றும் உளவுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கொடுக்கும் அழுத்தத்தின் பேரில், மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் தனக்கு தொந்தரவு அளிப்பதாகவும், நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்றும், விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்த நிலையில், தனக்கு ஓய்வூதியம் கிடைக்கக்கூடாது என்பதற்காக தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஈடுபட்டுள்ளதாகவும், தனக்கு அளிக்கப்பட்ட வாகனத்தை அமைச்சரின் பாதுகாப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், ஊழல் செய்து வசூல் செய்து கொடுக்காத நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

நெருப்பில்லாமல் புகையாது என்பதற்கேற்ப, காவல் துறையில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பதும், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதும் காவல் துணைக் கண்காணிப்பாளர் பேட்டியிலிருந்து தெளிவாகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப, தமிழ்நாடு முழுவதும் இந்த அவல நிலைதான்.

சட்டம்-ஒழுங்கை தன் கையில் வைத்திருக்கும் முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, கரைபடிந்த அதிகாரிகளை களையெடுக்கவும், நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுவதை தடுத்து நிறுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x