Published : 20 Jul 2025 10:36 AM
Last Updated : 20 Jul 2025 10:36 AM
திருத்துறைப்பூண்டி: ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பேசியது: “அதிமுக வெற்றி பெற்றால் பாஜவுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பார்கள் என்று முதல்வ்ர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. உங்களைப் போல வாரிசுக்காக ஆட்சிக்கு வர நாங்கள் துடிக்கவில்லை.
நீங்கள் கூட்டணி வைக்கும்போது பாஜக நல்ல கட்சி. அதே நாங்கள் வைத்தால் மதவாத கட்சியா? அதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஜால்ரா தட்டுகின்றனர். பாஜகவுடன் கூட்டணி வைத்த திமுகவுடன் கம்யூனிஸ்டுகள் தற்போது கூட்டணி வைத்திருக்கின்றனர். பிறகு நாங்கள் கூட்டணி வைக்கும்போது மட்டும் எதற்கு பயப்படுகிறீர்கள்?
மக்கள் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். எங்களுக்கு இந்த மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைய வேண்டும். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. திமுக ஓர் ஊழல் கட்சி. அதை அகற்ற வேண்டும் என்று பாஜக கருதுகிறது. அந்த நிலைப்பாட்டில்தான் பாஜக எங்களுடன் இணைந்திருக்கிறது.
இன்னும் சில கட்சிகள் எங்களுடன் வர இருக்கின்றன. சரியான நேரத்தில் அவர்கள் வருவார்கள். உங்களுக்கு சரியான நேரத்தில் மரண அடி கொடுப்போம். கவலைப்படாதீர்கள். 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்கிறீர்கள். நீங்கள் கனவில் வேண்டுமானால் ஜெயிக்கலாம். நிஜத்தில் அதிமுக கூட்டணிதான் ஜெயிக்கும்” என்று பழனிசாமி பேசினார்.
மன்னிப்பு கோரிய இபிஸ்: எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை நாகை அவுரி திடலுக்கு வந்தபொது, அவருக்கு அதிமுக கட்சியினர் மேளதாளம் முழங்க மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவுரித்திடலில், மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும்போது அருகிலிருந்த பள்ளிவாசலில் இருந்து தொழுகையின்போது ஒலிக்கும் பாங்கானது திடீரென ஒலித்தது. ஆனால் பேச்சு மும்முரத்தில் இதனை கவனிக்காத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பாங்கு ஓலிப்பதாக எடப்பாடி பழனிச்சாமிடம் காதில் கிசுகிசுக்க, சுதாரித்துக் கொண்ட அவர் தனது உரையை உடனடியாக நிறுத்தினார்.
அதற்குள் பாங்கும் நின்றது. அப்போது கீழே இருந்த தொண்டர்கள் கூச்சல் இட்டதை தொடர்ந்து, ‘பாங்கு ஒலித்ததை கவனிக்காமல் பேசி விட்டேன், சாரிமா’ என ஆங்கிலத்தில் கூறி சமாளித்த அவர், இஸ்லாமியர்களுக்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர் தொடர்ந்து தனது உரையை மக்கள் மத்தியில் நிகழ்த்தினார். இச்சம்பவம் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT