Published : 20 Jul 2025 08:41 AM
Last Updated : 20 Jul 2025 08:41 AM
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க.முத்து(77). இவர் கருணாநிதியின் மூத்த மகன் ஆவார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் மு.க.முத்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று காலை காலமானார். இதையடுத்து, அவரது உடல் அஞ்சலிக்காக ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது அண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து, மு.க.முத்து உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்தில்வைக்கப்பட்டது. அங்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடலைப் பார்த்து கண்கள் கலங்கியபடி நின்றிருந்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனது அண்ணன் மு.க.முத்துவின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.
பின்னர், குடும்ப உறுப்பினர்கள், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், ஆ.ராசா உள்ளிட்ட எம்.பி.,க்கள், எம்எல்ஏ.க்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை, மார்க்சிஸ்ட் கட்சியின்அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ, புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் ‘இந்து’ என்.ராம் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, கோபால புரம் இல்லத்தில் இருந்து நேற்று மாலை மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்தில் மு.க.முத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது. மு.க.முத்து மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
மு.க.முத்து, 1970 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல திரைப்படங்களில் தனது சொந்தக்குரலில் பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து மறைவுற்றார் என்ற செய்தி என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன். அவரும் தந்தையை போலவே இளமைக்காலம் முதல் நாடகங்களின் மூலமாகத் திராவிட இயக்கத்துக்கு தொண்டாற்றத் தொடங்கினார். நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கென தனி பாணியை வைத்திருந்தார். தனதுசொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார். என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக்கருதி, எப்போதும் என்னை ஊக்கப்
படுத்தி வந்தார். அவருக்கு அன்புஉணர்வுடன் எனது அஞ்சலியைசெலுத்துகிறேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் இரங்கல்: மு.க.முத்துவின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பாமக தலைவர் அன்புமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT